நெல்லையப்பர் கோயில் வெளித்தெப்பம் சீரமைக்க பக்தர்கள் வலியுறுத்தல்!
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் வெளித் தெப்பம் சீரமைக்க அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர். நெல்லையப்பர் கோயிலில் வெளித் தெப்பம், கருமாரி தெப்பம், அப்பர் உட்தெப்பம் என்ற மூன்று தெப்பங்கள் உள்ளன. இதில் அப்பர் உட்தெப்பம் மட்டுமே சீரமைக்கப்பட்டுள்ளது. வெளித் தெப்பத்திற்கு நயினார்குளத்தில் இருந்து தண்ணீர் வரும் பாதைகள் அனைத்தும் அடைபட்டுள்ளன. இருப்பினும் மழை பெய்வதாலும், நயினார்குளத்தில் தண்ணீர் அதிகமாக வந்தாலும் குளம் நிரம்புகிறது. ஆனால் தெப்பக் குளத்தை சுற்றிலும் ஒர்க்ஷõப், மரக்கடை, லாரி செட்டுகள் அமைந்துள்ளதால் அங்குள்ள ஆயில் கழிவுகள், குப்பைகள் மற்றும் சுற்றுப்புற வீடுகளில் இருந்து குப்பைகள் தெப்பக்குளத்தில் கொட்டப்படுகின்றன. தெப்பக்குளம் பராமரிப்பு இல்லாமல் தண்ணீரில் கழிவுகள் மிதக்கின்றன. தெப்பக்குளம் முழுவதும் ஆகாயத் தாமரைகள் வளர்ந்து தண்ணீரே தெரியாத அளவிற்கு குளம் முழுவதும் அமலைச் செடிகள் ஆக்ரமித்துள்ளன. குளத்தின் வடக்குப் பகுதியில் சுற்றுச் சுவர் இடிந்து கற்கள் குளத்திற்குள் விழுந்துள்ளன. தெப்பக்குளத்தை முறையாக பராமரிக்கவும், குளத்தில் ஆகாய தாமரை செடிகள் வளர்வதை தடுக்கவும், குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கவும் கோயில் நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.