உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநாகேஸ்வரம் கோவிலில் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

திருநாகேஸ்வரம் கோவிலில் ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்!

கும்பகோணம்: வரும், 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள, உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் என்பதில், எனக்கு முழு நம்பிக்கை உள்ளது என, இந்திய கிரிக்கெட் அணி தேர்வுக்குழு முன்னாள் தலைவர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தில், நாகநாதசுவாமி கோவில் உள்ளது. இங்கு, தனி சன்னிதி கொண்டுள்ள நாககன்னி, நாகவள்ளியுடன் கூடிய ராகுபகவானுக்கு, ராகுகாலத்தில் பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. மூலவர், நாகநாத பெருமானின் பிரகாரத்தில், ராகுபகவான் உற்சவர் சன்னிதி உள்ளது.

திருநாகேஸ்வரம் நாகநாதஸ்வாமி கோவிலில் உள்ள உற்சவருக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் ஸ்ரீகாந்த், நான்கு ஆண்டுக்கு முன், 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் மஞ்சம் செய்து வழங்கினார்.நேற்று, ராகுபகவான் உற்சவருக்கு சாத்தக்கூடிய வகையில், திருவாச்சி, பீடத்துடன் கூடிய தங்கமுலாம் பூசப்பட்ட கவசம், 3 லட்சம் ரூபாய் மதிப்பில் தயார் செய்து, ஸ்ரீகாந்த் வழங்கினார். இதையொட்டி, நேற்று காலை சிறப்பு ஹோமம் நடைபெற்று, ராகு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின், ராகுபகவான் உற்சவருக்கு தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தை அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடந்தது. நிகழ்ச்சியில், ஸ்ரீகாந்த் உறவினர்களுடன் பங்கேற்றார். கோவிலில் தரிசனம் செய்த பின், நிருபர்களிடம் ஸ்ரீகாந்த் கூறுகையில், இந்திய கிரிக்கெட் அணி தற்போது "நம்பர் ஒன் அணியாக உள்ளது. வரும், 2015ம் ஆண்டு நடைபெறவுள்ள, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி வெற்றி பெறும் என்பதில், எனக்கு முழு நம்பிக்கை உள்ளது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !