சீரியல் பார்க்கும் பெண்களே!
இனிப்பு, கசப்பு, துவர்ப்பு, புளிப்பு, உறைப்பு, கரிப்பு என்று ஆறுரஸங்கள் (அறுசுவை) இருக்கின்றன. வெறும் உப்பை, வெறும் புளியை, மிளகாயை, கடுக்காயை, பாகற்காயைச் சாப்பிடுவது என்றால் முடியாத காரியம். சர்க்கரை, வெல்லத்தை வேண்டுமானால் ஏதோ கொஞ்சம் சாப்பிடலாம். ஆனாலும், அது கூட மாவுகீவு சேர்த்துத் தித்திப்புப் பட்சணமாகப் பண்ணினால் சாப்பிடுகிற அளவுக்கு, சாப்பிட முடிவதில்லை. திகட்டி விடுகிறது. ஆனால், தனியாகச் சாப்பிட முடியாத இந்த ஷட்ரஸ வர்க்கங்களையும்(அறுசுவை) விதம் விதமாகக் கலந்து விட்டால், பல தினுசு வியஞ்சனங்கள் (உணவு வகை) செய்து வயிறாரச் சாப்பிட முடிகிறது. வாழ்க்கையிலும் இப்படியே! ஏதோ ஓர் உணர்ச்சி மட்டும் இருந்தால் சீக்கிரம் திகட்டி விடும். அதனால் தான் அழுகை, சிரிப்பு, வெற்றி, தோல்வி, மான அவமானம் எல்லாம் கலந்து வருகின்றன. சாந்தமுலேக ஸெளக்யமுலேது என்று தியாகையர்வாள் (திருவாரூர் தியாகராஜர்)பாடினது போல, வாழ்வில் எத்தனை விதமான உணர்ச்சிகளில் மொத்துப்பட்டாலும், கடைசியில் சவுக்கியம் வேண்டுமானால் சாந்தநிலையைத் தான் அடைய வேண்டும். அதற்குத் தான் எல்லாக் கலைகளும் உதவ வேண்டும். நாடகம் போன்ற கலைகளில் நாலாதினுசான உணர்ச்சிமோதல்கள் இருந்தாலும், அதைப் பார்த்து முடித்தபின் மனசில் இனம் தெரியாத அமைதியும் ஆனந்தமும் நிலவ வேண்டும்.