உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியகாண்டியம்மன் கோவிலில் வேடபரி சென்று அம்பு போடும் நிகழ்ச்சி

பெரியகாண்டியம்மன் கோவிலில் வேடபரி சென்று அம்பு போடும் நிகழ்ச்சி

மணப்பாறை: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள வீரப்பூரில் பெரியகாண்டியம்மன் தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் பொன்னர் சங்கர், தங்காள், மகாமுனி, கருப்பண்ணசாமி உட்பட பல தெய்வங்கள் உள்ளன. இந்த கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாதத்தில் பத்து நாட்கள் நடக்கும் மாசித்திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவாகும். இந்த விழாவில் கரூர், பொள்ளாச்சி, கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல் உள்ளிட்ட கொங்கு நாட்டு மக்கள் வந்து வழிபட்டு செல்வார்கள். மாசி திருவிழாவி விழாவில் குதிரை வாகனத்தில் சென்ற அனியாப்பூரில் பொன்னர் அம்புபோடும் வேடபரி நிகழ்ச்சி நடப்பது வழக்கம். அதுபோல, நாட்டில் விளைநிலங்கள் செழிக்கவும், மக்கள் பஞ்சம், பசி, பட்டினி இன்றி வாழவும், பட்டியில் உள்ள ஆடு, மாடுகள் நோய் நொடி இல்லாமல் இருக்கவும் ஆயுதபூஜைக்கு அடுத்தநாள் மகரநோன்பு விழாவை முன்னிட்டு கோவிலின் கிழக்கு பகுதிக்கு வேடபரி செல்லும் நிகழ்ச்சியும் நடப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் இரவு சாம்புவன் காளை முன்செல்ல பின்னே குதிரைவாகனத்தில் பொன்னர் கையில் அம்பு ஏந்தியும், பின்னே வெள்ளையானை வாகனத்தில் ஸ்ரீபெரியகாண்டியம்மனும் தங்காள் தண்ணீர் குடம் சுமந்தும் சென்று சிறிது தொலைவில் உள்ள அம்புபோடும் இடத்தில் பொன்னர் வாழை மரத்தில் அம்பு போடும் நிகழ்ச்சி நடந்தது. அம்பு போட்ட பின் வாழையில் இருந்து வரும் பால் நிலத்தில் வடியும் இந்த மண்ணை பக்தர்கள் மற்றும் மக்கள் எடுத்துச் சென்று தங்கள் நிலங்களில் தூவினால் விளைச்சல் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !