உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அறநிலைய துறை அறிவிப்பு ரத்து கோரி மாநாடு!

அறநிலைய துறை அறிவிப்பு ரத்து கோரி மாநாடு!

சென்னை: கோவில்மனை குடியிருப்போருக்கு, அறநிலையத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பை ரத்து செய்ய கோரி, தமிழ்நாடு கோவில் மனை குடியிருப்போர் சங்கம் சார்பில், வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு, வரும், 20ம் தேதி, சென்னையில் நடக்கிறது. இது குறித்து, கோவில் மனை குடியிருப்போர் சங்க தலைவர், பாலசுப்பிரமணியன் கூறியதாவது: கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், தமிழ்நாடு முழுவதும், லட்சக்கணக்கானோர், தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு இன்று வரை, குடியிருப்பு மனைப்பட்டா கிடைக்கவில்லை. நடைமுறையில் இருந்த, பகுதி கட்டணத்தை, கடந்த ஆட்சியில், சதுர அடி கணக்கில், வாடகை மாற்றம் செய்யப்பட்டது. மேலும், 2004ல்,வெளியிடப்பட்ட அரசாணை, 131ன் படி, கோவில் மனையில் குடியிருப்பவர் தன் சொந்த செலவில், கட்டப்பட்ட கட்டடத்தை, கோவிலுக்கு தானமாக எழுதிக் கொடுக்க வேண்டும் என, தற்போது செயல் அலுவலர்களால் அறிவிப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சூகட்டடத்தை தானமாக எழுதிக் கொடுக்க தவறினால், குத்தகை ரத்து செய்யப்படும்; உடனே மனையை விட்டு வெளியேற வேண்டும்; தவறினால் அபராதத் தொகை கட்ட வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதை ரத்து செய்யக் கோரி, சென்னை, பாடியில் உள்ள, மண்ணூர்பேட்டை வியாபாரிகள் கல்யாண மண்டபத்தில், வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு, வரும், 20ம் தேதி, மாலை நடக்கிறது. இதில், தமிழகம் முழுவதும் உள்ள கோவில் மனை குடியிருப்போர் நல சங்கங்களும், அரசியல் பிரமுகர்களும் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !