சிவன் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண விழா வரும் 21ல் கொடியேற்றம்
தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோயில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. 29ம் தேதி தேரோட்டமும், 31ம் தேதி திருக்கல்யாணமும் நடக்கிறது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சங்கரராமேஸ்வரர் கோயிலில் நடக்கும் திருவிழாக்களில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா பெரிய அளவில் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு ஐப்பசி திருக்கல்யாண திருவிழா வரும் 21ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது. கொடியேற்றத்தில் இருந்து பத்து நாளும் தினமும் பாகம்பிரியாள் அம்மன் ஒவ்வொரு வாகனத்திலும் வீதி உலா வருதல் நடக்கிறது. வரும் 30ம் தேதி பூம்பல்லக்கு நடக்கிறது. 31ம் தேதி 11ம் திருநாள் அன்று காலை சுவாமி, அம்மன் தபசு மண்டபத்தில் எழுந்தருளல் நடக்கிறது. பின்னர் ரிஷப வாகனத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தல் நடக்கிறது. இதன தொடர்ந்து மாலை மாற்றுதல் நிகழ்ச்சியும், இரவு 8 மணிக்கு திருக்கல்யாணமும் நடக்கிறது. விழாவை ஒட்டி பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைநிகழ்ச்சிகள், பக்தி சொற்பொழிவு என்று பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் அர்ச்சகர்கள், கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.