உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொதுமக்கள் கூடிவைத்த புரட்டாசி பொங்கல்:16 ஆண்டுகளுக்குப்பின் கோலாகலம்

பொதுமக்கள் கூடிவைத்த புரட்டாசி பொங்கல்:16 ஆண்டுகளுக்குப்பின் கோலாகலம்

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகேயுள்ள எஸ் கல்லுப்பட்டியில் ஊருக்கு அருகே அய்யனார்கோயில் மற்றும் வாழவந்த அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் கடைசி ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி பொங்கல் வைத்துக் கொண்டாடுவது வழக்கம். அதற்கு அடுத்த நாள் முளைப்பாரி ஊர்வலமும்  நடத்தப்படும். 1996 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலின்போது தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக ஊர் பொதுமக்களிடம் தகராறு ஏற்பட்டு விழா தடைபட்டது.  இந்நிலையில் இந்த ஆண்டு ஊர் பெரியவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்றுகூடி தங்களுக்குள் இருக்கும் பகையை மறந்து ஊரில் நல்ல மழை பெய்ய வேண்டியும், விவசாயம் சிறக்க வேண்டியும், கிராமமக்கள் நலம் பெற வேண்டியும், கடந்த 16 ஆண்டுகளாக தடைபட்ட புரட்டாசிப் பொங்கல் விழாவை அய்யனார் கோயிலில் இந்த ஆண்டு சிறப்பாக நடத்த முடிவு செய்யப்பட்டது. அதையடுத்து, எஸ். கல்லு<ப்பட்டியில் உள்ள அய்யனார் கோயில் மற்றும் அதன் அருகில் <உள்ள வாழவந்த அம்மன் கோயில் வளாகத்தில் 16 ஆண்டுகளுக்குப் பின்னர் புரட்டாசிப் பொங்கல் விழா செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது. இதில், ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி 108 பானைகளில் பொங்கல் வைத்துக் கொண்டாடினர். அதைத்தொடர்ந்து, அய்யனார் சுவாமிக்கும், வாழவந்த அம்மனுக்கும் சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன. முளைப்பாரி ஊர்வலம் புதன்கிழமை நடைபெற்றது. இதில், 201 முளைப்பாரி வைத்து ஊர் பொது இடத்தில் இருந்து முக்கிய வீதிகள் வழியாகவும் அய்யனார் கோயில் வரை பெண்கள் ஊர்வலமாக முளைப்பாரி எடுத்து வந்தனர். திருவிழாவில் உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !