மீண்டும் உயிர் பெற்றது கோவில் பாதுகாப்புக்குழு!
கோவை: கோவில்களில், நள்ளிரவு நேரத்தில் நடக்கும் திருட்டு சம்பவங்களை தடுக்க, மக்களை ஒருங்கிணைத்து கிராமக்கோவில் பாதுகாப்புக்குழு உருவாக்கப்பட்டுள்ளது. கோவையில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடும் சம்பவமும், விலை உயர்ந்த ஆபரணங்களை கொள்ளை அடிக்கும் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகின்றன. ரத்தினபுரி, சரவணம்பட்டி, புறநகரில் வடவள்ளி, தொண்டாமுத்தூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில், உண்டியல் உடைப்பு சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. திருட்டு சம்பவம் குறித்து, தடயவியல் நிபுணர்கள் பல தடயங்களை போலீசாருக்கு கொடுத்தனர். அதை ஆதாரமாக கொண்டு நகர் மற்றும் புறநகர் போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதன் பயனாக, சில திருட்டு சம்பவங்களில் தொடர்புடையவர்களை போலீசார் பிடித்து, பொருட்களை மீட்டனர். பக்தர்களால் வழங்கப்பட்ட நிதியாதாரத்தையும், உபயமாக வந்த பொருட்களை ஆதாரமாகக் கொண்டும், சுவாமிக்கு நகை ஆபரணங்கள் செய்து அணிவிக்கப்படுகின்றன. அவற்றை பாதுகாப்பாகவும் எச்சரிக்கையாகவும் வைக்க வேண்டும் என்று கோவில் நிர்வாகிகளுக்கு அறநிலையத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதோடு, கிராமக்கோவில் கண்காணிப்புக்குழுவை ஏற்படுத்தியுள்ளது. இக்குழுவினர் இரவு 11.00 மணி முதல் அதிகாலை 6.00 மணி வரை கோவில் பாதுகாப்புப்பணியில் ஈடுபடுவர். கோவை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் நடராஜன் கூறியதாவது: முன்பு கிராமக்கோவில் பாதுகாப்புக்குழு இருந்தது; சில காலம் செயல்படாமல் இருந்தது. தற்போது மீண்டும் உயிர்பெற்றுள்ளது. இதற்காக கிராமங்கள் தோறும், கோவில் நிர்வாகிகளிடம் அழைப்பு விடுத்துள்ளோம். அதன் படி, கிராமங்களிலுள்ள கோவில்களை சுற்றி வசிப்போர் இரவு நேரங்களில் கோவில் பாதுகாப்பு பணி மேற்கொள்ள உறுதியளித்தனர். இவர்கள் இரவு ரோந்து வரும் போலீசார் மற்றும் வழக்கமான பாதுகாவலர், ஊர்காவல்படையினரோடு இணைந்து செயல்படுவர். நகரில் நகை மற்றும் ஆபரணங்கள் அதிகமாக இருக்கும் கோவில்களை சுற்றி போலீஸ் ரோந்து செல்லவும், அங்கு வசிக்கும் பொதுமக்களோடு தொடர்பு கொண்டு இரவு நேர பாதுகாப்பு பணி மேற்கொள்ளவும், அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு கோவிலுக்கும் "கள்வர் எச்சரிக்கை மணி பொருத்தப்பட்டுள்ளது. சரியாக இல்லாத கோவில்களில் புதியதாக வாங்கி பொருத்தவும், சரிசெய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது, அதனால், கோவில்களில் திருட்டு சம்பவங்கள் முற்றிலும் தடுக்கப்படும்.இவ்வாறு, அறநிலையத்துறை இணை கமிஷனர் நடராஜன் தெரிவித்தார்.