உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனை வணங்க அவனருள் தேவை!

சிவனை வணங்க அவனருள் தேவை!

அவிநாசி: சிவாலயத்துக்கு சென்று வணங்க நினைத்தால், அவனருள் இல்லாமல் செல்ல முடியாது, என்று ஆன்மிக சொற்பொழிவாளர் சாய் புவனேஸ்வரி தெரிவித்தார். திருமுருகன்பூண்டி திருமுருகநாத சுவாமி கோவிலில், திருமுருகநாத சுவாமி அறக்கட்டளை சார்பில் தீபம் ஏற்றும் விழா நடந்தது. அறக்கட்டளை தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயலாளர் குமாரசாமி முன்னிலை வகித்தார். ஆலோசகர் முத்து நடராஜன் வரவேற்றார். சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை பொருளாளர் சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அவிநாசியை சேர்ந்த சண்முக காயத்ரி பரதநாட்டியம் ஆடினார்.

சென்னை சாய் புவனேஸ்வரி பேசியது:
பிரதோஷத்தன்று சிவாலயம் சென்று வழிபட்டால், அனைத்து தோஷங்களும் நீங்கும். தேவர்களை, அசுரர்களை துன்புறுத்தி வந்தனர். இதுபற்றி, சிவபெருமானிடம், தேவர்கள் முறையிட்டனர். அன்றைய நாளில் மாலைப்பொழுதில் எம்பெருமான் பிரம்ம தாண்டவம் ஆடினர். அதுவே, பிரதோஷ காலம். அவரது நடனத்தை காண, பிரம்மா, விஷ்ணு உள்ளிட்ட மூர்த்திகள் அனைவரும் ஆர்வத்துடன் திரண்டனர். பிரதோஷ நாளில் விரதமிருந்து, மாலையில் சிவாலயத்துக்குச் சென்று தரிசனம் செய்து, சோமசூத்ர பிரதட்சண வலம் வந்தால், புண்ணியம் கிடைக்கும். சிவன் அபிஷேகப்பிரியன் என்பதால், பிரதோஷ நாளில், பால், தயிர், தேன், சந்தனம், மலர்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வழிபடலாம். நித்ய பிரதோஷம், பக்ஷ பிரதோஷம், மாத பிரதோஷம், மகா பிரதோஷம், பிரளய பிரதோஷம் என்று ஐந்து வகை பிரதோஷ நாட்கள் உள்ளன. இவற்றில், சனிக்கிழமை வரும் மகா பிரதோஷம் மிகவும் புண்ணியம் வாய்ந்தது. அன்றைய நாளில், சிவபெருமானை வழிபட அனைத்து தோஷங்களும் நீங்கும்; வளமும் பெருகும். அவரின் முதல் சீடர், பிரதிநிதியாக நந்தியம் பெருமானை அருகம்புல் மாலையிட்டு, நெய் தீபம் ஏற்றி வழிபட்டால், பெரும் பாக்கியம் உண்டாகும். சாதாரணமாக, சிவாலயத்துக்கு சென்று விட முடியாது. சிவனை வணங்க அவனருள் கிடைத்தால் மட்டுமே வழிபட முடியும். சதா, "சிவம் என்று அவனை பாராயணம் செய்தால், நன்மையே உண்டாகும். இவ்வாறு, அவர் பேசினார். அறக்கட்ளை துணை செயலாளர் குப்புசாமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !