பம்பையில் கேரள அரசு பஸ்களுக்கு தினமும் 6 ஆயிரம் லிட்டர் டீசல்!
சபரிமலை: பம்பையில் கேரள அரசு பஸ்களை ஓட்ட, தினமும் ஆறாயிரம் லிட்டர் டீசல் தேவைப்படுகிறது. இது தனியார் பங்க்லிருந்து தினமும் டேங்கர் மூலம் பம்பை கொண்டுவரப்படுகிறது. கேரள அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு சபரிமலை சர்வீஸ் முக்கிய வருமானமாகும், இங்கு வரும் பக்தர்களில் 80 சதவீதம் பேர் இந்த பஸ்சில்தான் பயணம் செய்ய வேண்டும். வேன், டூரிஸ்ட் பஸ்கள் நிலக்கல்லில் பார்க்கிங் செய்யப் படுவதால், அங்கிருந்து பம்பைக்கு கேரள அரசு பஸ்சில்தான் செல்ல வேண்டும். இதனால் அதிகமான சர்வீஸ் நடத்த வேண்டிய நிலையில் உள்ள கேரள அரசு போக்குவரத்துக்கழகத்துக்கு, தற்போது தினமும் ஆறாயிரம் லிட்டர் டீசல் தேவைப் படுகிறது. கடந்த 10ம் தேதி வரை 7370 தொலைதூர டிரிப்புகளும், நிலக்கல்- பம்பை இடையே 10 ஆயிரத்து 675 டிரிப்புகளும் சென்றுள்ளன. 10 லட்சம் பக்தர்கள் பயணம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட 15 சதவீதம் வரை அதிகமாகும்.