உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனதில் உறுதி வேண்டும்!

மனதில் உறுதி வேண்டும்!

*தர்மத்தாலும், கருணையாலும் பெறப்படும் வெற்றியே நிலைபெற்று நிற்கும். அதர்மத்தை தர்மத்தாலும், தீமையை நன்மையாலும் தான் வெல்ல முடியும்.
*தொழிலில் வல்லவனை வெற்றி தேடிவரும். வலிமை இல்லாதவன் தோற்றுப் போவான்.
*மனதில் உறுதி வேண்டும். வாக்கினிலே இனிமை வேண்டும். நினைவிலே நல்லது வேண்டும். நோயற்ற உடலும், நூறாண்டு வாழ்நாளும் வேண்டும். அச்சம் இல்லாத அமைதி எப்போதும் மனதில் குடியிருக்க வேண்டும்.
*தன்னை வென்றவனுக்கு மட்டுமே வாழ்வில் பெருமை, வெற்றி, மேன்மை எல்லாம் கிடைப்பது சாத்தியம்.
*பாவத்தை பாவத்தாலேயே வெல்ல நினைப்பது அறியாமை. பாவத்தை புண்ணியத்தால் வெல்ல முயலுங்கள்.
*துணி வெளுக்க உவர் மண் இருக்கிறது. தோல் வெளுக்கச் சாம்பல் உண்டு. ஆனால், மனிதனின் மனதை வெளுக்க மட்டும் வழியில்லை.
*விவேகமே இந்த உலகில் எல்லாவிதமான செல்வங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. விவேகமில்லாத மனிதன் பார்வை இழந்தவர் களுக்குச் சமமானவர்கள்.
*திருமண பந்தம் புனிதமானது. அதை நிரந்தரமாகப் பாதுகாப்பதே மனித நாகரிகம். விவாகரத்து செய்யும் விஷயத்தில் யாரும் அவசரப்படக் கூடாது.
*எதை மனிதன் விரும்புகிறானோ அதுவே நடக்கிறது. எதை ஆதரிக்கிறானோ அதுவே வளர்ச்சி பெறுகிறது. பேணாத எதுவும் அழிந்து போகும்.
*பணக்கவலையும், மனக்கவலையுமே மனிதனுக்கு நோயாக வெளிப்படுகின்றன.
*விதியின் முடிவு எப்படிப்பட்டதாக இருந்தாலும் கவலை வேண்டாம். அதை வெல்லும் சக்தி தெய்வபக்திக்கு உண்டு.
*ஆபத்து வரும்போது நடுங்குபவன் மூடன். ஆபத்துக் காலத்திலும் யாருடைய உள்ளம் நடுங்காமல் துணிவுடன் செயலாற்றி, அதை போக்க முயற்சி செய்கிறானோ அவனே ஞானி.
*செல்வம் ஒரே இடத்தில் குவியக் கூடாது. பலரிடமும் பொருள் பரவியிருக்கும்படி செய்வதே மேன்மையானது.
*விதிப்படி இந்த உலகம் நடக்கிறது. மனித வாழ்க்கை இந்த உலகத்தின் வாழ்க்கையிலே ஒரு சிறுபகுதி. விதி தவறி ஒன்றும் நடக்காது.
*விதியை நம்பி, விதை விதைக்காவிட்டால் பயிர் விளைவதில்லை. விதியை நம்பும் அதே நேரத்தில், உழைக்கவும் தயங்கக் கூடாது.
*இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற எண்ணத்தை நெஞ்சில் பதித்துக் கொண்டு, இன்பமுடன் வாழுங்கள்.
*உள்ளிருக்கும் தத்துவப் பொருள் புரியாமல், வெறுமனே கதை சொல்லி வழிபடுவோருக்கு தெய்வம் வரம் கொடுப்பதில்லை.
*பயம், துயரம், கவலை இல்லாமல் இருந்தால், எந்த காலத்திலும் சாகாமல் நிரந்தரமாக வாழ முடியும்.
*உயிர்களை நேசியுங்கள். தெய்வம் உண்மை என்பதை உணருங்கள். மனதை உறுதிப் படுத்துங்கள். இதுவே வாழும் முறை.
* நீண்டவயது, நோயின்மை, அறிவு, செல்வம் இந்த நான்கும் தந்தருளும்படி கடவுளிடம் மன்றாடிக் கேளுங்கள்.
-பாரதியார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !