உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேரிக்குடியிருப்பு கற்குவேல் அயேனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா

தேரிக்குடியிருப்பு கற்குவேல் அயேனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா

உடன்குடி: தேரிக்குடியிருப்பு கற்குவேல் அயேனார் கோயில் கள்ளர்வெட்டு திருவிழாவில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடந்தது.இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் போட்டி போட்டு புனித மணல் எடுத்தனர். உடன்குடி பஞ்., யூனியனுக்கு உட்பட்ட தேரிக்குடியிருப்பு அருகேயுள்ள குதிரைமொழி தேரியில் அமைந்துள்ளது கற்குவேல் அயேனார் கோயில்.இங்கு நடக்கும் கள்ளர் வெட்டு திருவிழா புகழ்பெற்றது.கார்த்திகை மாதம் முதல் நாளில் துவங்கும் இத்திருவிழாவின் முப்பதாவது நாளில் கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இத்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது.விழாவின் முக்கிய நாட்களான கடந்த டிச 14ம் தேதி காலை ஐவராஜா - மாலையம்மன் பூஜையும், மாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், இரவு மாக்காப்பு தீபாராதனை நடந்ததுவிழாவில் நேற்று காலை 108 பால்குடம் எடுத்து வருதல், தாமிரபரணி தீர்த்தம் எடுத்து வருதல், பேச்சியம்மனுக்கு முளைப்பாரி எடுத்து வருதல் நிகழ்சியும்,மதியம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று மாலை 3 மணிக்கு சுவாமிகள் கள்ளர்வெட்டு நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்று கடைகடையாக பொருட்கள் எடுத்தல் நிகழ்ச்சியும் மாலை 4 மணி அளவில் கோயிலுக்கு பின்புறம் உள்ள செம்மணல் தேரிக்குன்றில் கள்ளர் என்னும் இளநீர் கொண்டு வரப்பட்டு பல்லாயிரகணக்கான பக்தர்கள் முன்னிலையில் மாலை 4.30 மணிக்கு கள்ளர்வெட்டு நிகழ்ச்சி நடந்தது.

கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் மணல் எடுத்து வீடு மற்றும் கடைகளில் வைத்தால் செல்வம் மற்றும் வியாபாரம் பெருகும் என்ற ஐதீகம் இருப்பதால் ஏராளமான பக்தர்கள் போட்டு போட்டு புனித மணல் எடுத்தனர். கடந்த ஆண்டு கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடக்கும் போது போதிய பாதுகாப்பு இல்லாததால் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடத்தவும் பொது மக்கள் புனித மணல் எடுக்கவும் மிகுந்த சிரமப்பட்டனர்.இந்த வருடம் திருச்செந்தூர் டிஎஸ்பி கந்தசாமி மற்றும் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி ராமராஜன் ஆகியோர் ஏற்பாட்டில் ஏராளமான போலீசார் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் குவிக்கப்பட்டு கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடத்தவும் மற்றும் பொது மக்கள் சிரமமின்றி மணல் எடுத்துச்செல்லவும் ஏற்பாடு செய்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் நெல்லை மண்டல இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் அன்புமணி,கோயில் செயல் அலுவலர்கள் ராஜேந்திரன், கணபதிமுருகன், கசன்காத்த பெருமாள் மற்றும் பாரத திருமுருகன் திருச்சபை தலைவர் மோகனசுந்தரம், குதிரைமொழி பஞ்., தலைவர் கன்னிமுத்து உட்பட பலர் கலந்துகொண்டனர். இதை தொடர்ந்து வாணவேடிக்கை, இரவு 8 மணிக்கு நகைச்சுவை பட்டிமன்றம் ஆகியன நடந்தது. ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத்துறை இணைஆணையர் அன்புமணி, தூத்துக்குடி உதவி ஆணையர் செல்லத்துரை, கோயில் தக்கார் சிவக்குமார், நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !