உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி பஞ்சாமிர்தத்திற்கு சிக்கல்: ஏமாற்றமடைந்த பக்தர்கள்!

பழநி பஞ்சாமிர்தத்திற்கு சிக்கல்: ஏமாற்றமடைந்த பக்தர்கள்!

பழநி: பழநிகோயில் அபிஷேக பஞ்சாமிர்தம் தயார் செய்வதற்காக, வாங்கிய வாழைப்பழங்கள் சரியாக பழுக்காததால், பஞ்சாமிர்தம் தட்டுபாடு ஏற்பட்டது. பழநி கோயிலுக்கு வரும், பக்தர்கள், அபிஷேக பஞ்சாமிர்தத்தை பிரதான பிரசாதமாக வாங்கிச்செல்கின்றனர். ஆண்டுதோறும் இதன் மூலம் 25 கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கிறது. ஒப்பந்ததாரர் மூலம் கற்பூரவல்லி வாழைப்பழம் வரவழைக்கப்பட்டு, அதில் பேரீச்சை பழம் மற்றும் இதரப்பொருட்கள் கலந்து பஞ்சாமிர்தம் தயாரிக்கப்படுகிறது. ஐயப்பன் சீசன் காரணமாக வழக்கத்தை விட 30 சதவீதம் வரை பஞ்சாமிர்த விற்பனை அதிகரித்துள்ளதால், 60 டன் வரை மொத்தமாக வாழைப்பழங்கள் கொள்முதல் செய்யப்பட்டன. இதில், வாழைக்காயாக கற்பூரவல்லி கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. குடோனில் சராசரியாக இரண்டுநாட்களில் பழுக்கவேண்டிய வாழைக்காய்கள், பழநியில் கடும் பனி காரணமாக, சரியாக பழுக்கவில்லை. இதனால் நேற்று பஞ்சாமிர்த தயார்செய்வதில் தொய்வு ஏற்பட்டது. இதன்காரணமாக மலைக்கோயில், பாதவிநாயகர் கோயில் ஆகிய பஞ்சாமிர்த விற்பனை நிலையங்களில் பஞ்சாமிர்தம் கிடைக்கததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

ஆர்.ராமு, பக்தர், திருச்சி: நூறுபேர் கொண்ட குழுவினராக, ஐயப்பன்கோயில் சென்றுவிட்டு, பழநிகோயிலுக்கு வந்தோம், அபிஷேக பஞ்சாமிர்தம் இல்லை என கூறுகின்றனர். வேறுவழியின்றி, தனியார் கடைகளில் வாங்கிச்செல்கிறோம். பலகோடிரூபாய் வருமானம் உள்ள கோயில் நிர்வாகம், தட்டுபாடு இல்லாமல் பஞ்சாமிர்தம் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும், என்றார்.

கோயில் இணை ஆணையர்(பொ) ராஜமாணிக்கம் கூறுகையில்,
அதிகபனியால் வாழைக்காய் பழுக்கவில்லை. மேலும் விற்பனை அதிகரிப்பு காரணமாக, பஞ்சாமிர்தம் சிறிதுநேரம் தட்டுபாடு ஏற்பட்டது. தற்போது சீராகிவிட்டது. ஸ்டால்களில் பஞ்சாமிர்தம் விற்பனை நடக்கிறது, என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !