நன்மை தரும் பிரார்த்தனை எது ஸ்வாமி குருபரானந்தா விளக்கம்
ஈரோடு: எஸ்.கே.எம்., உடல் மற்றும் மன நல அறக்கட்டளை சார்பில் பகவத்கீதை 13வது அத்தியாயம் குறித்த ஆன்மிக சொற்பொழிவு ஈரோட்டில் நடந்தது. அறக்கட்டளை தலைவர் மயிலானந்தன் தலைமை வகித்தார். தொழில் அதிபர்கள் சந்திரசேகர், சியமளா ஷர்மிலி, நவநீத கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தினமும் காலை, மாலை வேளைகளில் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. சொற்பொழிவில் ஸ்வாமி குருபரானந்தா பேசியதாவது: மனிதனுக்கு ரிதம், சத்தியம் ஆகிய இரண்டும் அத்தியாவசிய தேவை. ரிதம் என்பது ஒருவரை சரியாக புரிந்து கொள்ளுதல். ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு அதை அப்படியே சொல்லுவதே சத்தியம். ஒருவரை தவறாக புரிந்து கொண்டு தான் நினைப்பது தான் உண்மை என்ற நம்பிக்கையுடன் இருப்பது ரிதமாக இருக்க முடியாது. நீங்கள் எப்போதும் உண்மையானவராக இருக்க முடியும் என்றால் கடவுளுக்கு நிகராக மதிக்கப்படுவீர். கடவுள் மட்டுமே உண்மையானவர். எல்லோரையும் புரிந்து கொள்ளும் சக்தியை நமக்குதர வேண்டும் என்று கடவுளிடம் பிரார்த்தனை செய்வது நற்பலனை தரும். சத்தியம் பேசும் திறனையும், மனவலிமையை நமக்கு கடவுள் தரவேண்டும் என்ற பிரார்த்தனை நன்மையை தரும். அறியாமையை நீக்கி அறிவை கொடுத்து காப்பாற்று என்ற வழிபாடுதான் தூய, சரியான வழிபாடாக இருக்க முடியும். கடவுளிடம் வேண்டுதல் என்பது ஒருவருக்கொருவர் மாறுபடும். இவ்வாறு ஸ்வாமி குருபரானந்தா பேசினார்.