உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 26 ஆண்டாக திருச்சி மலைக்கோட்டைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள்!

26 ஆண்டாக திருச்சி மலைக்கோட்டைக்கு இருமுடி கட்டி வரும் பக்தர்கள்!

திருச்சி: மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தோர், 26 ஆண்டுகளாக, இருமுடி கட்டி வந்து, சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கும், பழனி முருகன் கோவிலுக்கும் தான், இதுவரை பக்தர்கள் இருமுடி கட்டி செல்வதை பார்த்திருப்போம். ஆனால், சென்னை அருகேயுள்ள, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்தோர், 26 ஆண்டுகளாக, திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு, இருமுடி கட்டி வந்து, சாமி தரிசனம் செய்கின்றனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள, சாமிரெட்டிகண்டிகை கிராமத்தைச் சேர்ந்த, 22 பேர், நேற்று மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு இருமுடி கட்டி வந்தனர். மலைக்கோட்டையில் இருமுடியை இறக்கியதும், சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. இதுகுறித்து, குருசாமியான, ஏழுமலை கூறியதாவது: கடந்த 26 ஆண்டுகளாக, மலைக்கோட்டைக்கு இருமுடி கட்டி வருகிறோம். சபரிமலை அய்யப்பனுக்கு விரதம் இருப்பது போல, 48 நாட்கள் விரதம் இருந்து, நெய் தேங்காய், அரிசி என, இருமுடி கட்டி இங்கு வருகிறோம். உச்சிப்பிள்ளையார் பூஜைக்குரிய தொகையை முன்கூட்டியே, வரைவோலையாக எடுத்து அனுப்பி விடுவோம். இங்கு வந்ததும் அபிஷேகம், நெய் அபிஷேகம், சந்தனக்காப்பு நடக்கும். குழந்தை வரம் வேண்டியும், வியாபாரம் சிறக்கவும், வீட்டில் குடும்ப பிரச்னை நீங்கவும், பலரும் எங்களுடன் இருமுடி கட்டி வருகின்றனர். அவர்களின் பிரார்த்தனை நிறைவேறுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !