தான்தோன்றியம்மன் கோவில் குண்டம் நூற்றுக்கணக்கானோர் நேர்ச்சைக்கடன்!
கோபிசெட்டிபாளையம்: கோபி, மொடச்சூர் தான்தோன்றியம்மன் குண்டம் திருவிழா நேற்று நடந்தது. ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கினர். மொடச்சூரில், மிகவும் பிரசித்தி பெற்ற தான்தோன்றியம்மன் கோவில் உள்ளது. ஆண்டு தோறும் டிசம்பரில், குண்டம் தேர்த்திருவிழா நடப்பது வழக்கம். கடந்த, 11ம் தேதி திருவிழாவுக்காக, பூச்சாட்டு நடந்தது. 23ம் தேதி அம்மனுக்கு விசேஷ சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. 25ம் தேதி காலை, பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து வழிபாடு செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வாக, நேற்று காலை குண்டம் திருவிழா நடந்தது. முன்னதாக, கோவில் முன், கரும்பு என்று அழைக்கப்படும், விறகுக்கட்டைகளால் குண்டம் அமைக்கப்பட்டது. காலையில் தான்தோன்றியம்மனுக்கு சிறப்பு, அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. குண்டம் இறங்கும் முன், உற்சவ மூர்த்தியான அம்மன், குண்டத்தின் முன் எழுந்தருளினார். கோவிலின் முன்புள்ள கருட கம்பத்தில், திருக்கோடி தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, கோவில் தலைமை பூசாரி கோபாலகிருஷ்ணன், குண்டத்துக்கு சிறப்பு பூஜை செய்து, குண்டத்தில் இருந்து தீக்கனலை, வானத்தை நோக்கி வாரி இறைத்து, குண்டத்தில் இறங்கி, குண்டம் இறங்குதலை துவக்கி வைத்தார். கடந்த, 15 நாட்களாக விரதம் மேற்கொண்டு வந்த ஆண், பெண் பக்தர்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் குண்டத்தில் இறங்கி, நேர்ச்சையை நிறைவேற்றினர். இன்று மாலை, 4 மணிக்கு தேரோட்டமும், 28ம் தேதி மலர் பல்லக்கும் நடக்கிறது. கோபி டி.எஸ்.பி., ராமசாமி தலைமையில், இன்ஸ்பெக்டர்கள் இளங்கோ, தவமணி முன்னிலையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பல்வேறு அமைப்பு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.