சீர்காழி திருவிக்ரம நாராயண பெருமாள் கோயில் சொர்க்கவாசல் திறப்பு!
மயிலாடுதுறை: நாகை மாவட்டம் சீர்காழியில் தாடாளன் பெருமாள் என்றழைக்கப்படும் லோகநாயகி தாயார் சமேத திருவிக்ரமநாராயண பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்று. இக்கோயிலில் மார்கழி மாதத்தை முன்னிட்டு பகற்பத்து உற்சவம் கடந்த 1 ம் தேதி தொடங்கி இன்று முடிவடைந்தது. இதையொட்டி நேற்று மாலை பெருமாள் மோகினி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வைகுண்ட ஏகாதசியான இன்று அதிகாலை பெருமாளுக்கு திருப்பள்ளி பாள்ளி எழுச்சி பாடப்பட்டு,சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டது. தொடர்ந்து 6மணிக்கு ரத்தின அங்கி அலங்காரத்தில் பெருமாள் சொர்க்கவாசல் என்றழை க்கப்படும் பரமபத வாசலில் எழுந்தருளினார். பக்தர்கள் கோவிந்தா, கோவிந் தா என கோஷமிட்டு பெருமாளை வழிபட்டனர். பின்னர் தாயாருடன், பெருமாள் வீதி உலா வந்து கோயிலில் எழுந்தருளினார். விழாவில் டாக்டர்கோதண்டராமன், எஸ்.எம்.எச். மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர் தங்கவேல் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும் பெருமாளின் வலது திருவடி சேவை கண்டு தரிசித்தனர். மாலை நம்மாழ்வாரின் 100 பாசுரங்கள் பாடப்பட்டு, திருவாய் மொழி சேவை மற்றும் சாற்றுமுறை நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை பத்ரி மற்றும் பிரபு பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர். சீர்காழி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதுபோல மயிலாடுதுறை திருஇந்தளூர் பரிமளரெங்கநாதர் கோயிலில் காலை 5:30 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.