உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வயலூர் தைப்பூசம் பக்தர்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்

வயலூர் தைப்பூசம் பக்தர்களுக்கு சிறப்பு பஸ் இயக்கம்

திருச்சி: வயலூர் முருகன் கோவில் தைப்பூச திருவிழா இன்று துவங்குகிறது. பக்தர்கள் சிரமமின்றி சென்று வர வசதியாக சிறப்பு பஸ் இயக்கப்படுகிறது. திருச்சி வயலூர் முருகன் கோவில் மிகவும் பிரசித்திப்பெற்றது. திருமணத்தடை, குடும்ப கஷ்டம் உள்ளிட்டவை நீங்க இக்கோவிலில் வழிபாடு நடத்தினால், உடனடி பலன் கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. இக்கோவிலின் தைப்பூச திருவிழா இன்று துவங்குகிறது. காலை, 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படும். 12 மணி வரை அபிஷேகங்கள், அர்ச்சனைகள் நடக்கிறது. மதியம், 1 மணிக்கு உற்சவர் முத்துக்குமார ஸ்வாமி கோவிலில் இருந்து புறப்பட்டு அதவத்தூர் உய்யக்கொண்டான் ஆற்றில் தீர்த்தவாரி கண்டு, ஆஸ்தான மண்டபத்தில், இரவு, 7 மணி வரை எழுந்தருள்வார். பின், ஸ்வாமிக்கு தீபாராதனை காட்டப்படுகிறது. இரவு, 8 மணிக்கு புறப்பட்டு வயலூர் வழியாக வரகாந்திடல் கிராமத்துக்கு இரவு, 10 மணிக்கு சென்றபின் வழிநடை உபயங்கள் நடைபெற்று நள்ளிரவு, 12 மணிக்கு கீழ வயலூர் தைப்பூச மண்டபம் வந்து சேர்கிறார். அங்கு மகாதீபாராதனை நடந்த பின், 1 மணிக்கு வடகாபுத்தூர் கிராமம் செல்கிறார். ஐந்து கிராம ஸ்வாமிகள் சந்திக்கும் நிகழ்ச்சி நாளை நடக்கிறது. காலை, 8 மணிக்கு உற்சவர் முத்துக்குமார ஸ்வாமி வடகாபுத்தூரில் இருந்து புறப்பட்டு, காலை, 10 மணிக்கு சோமரசம்பேட்டை பிரதான சாலைக்கு வந்து சேர்கிறார். அங்கு உய்யக்கொண்டான் திருமலை உஜ்ஜீவநாதர், அல்லித்துறை பார்வதீஸ்வரர், சோழிங்கநல்லூர் காசிவிஸ்வநாதர், சோமரசம்பேட்டை முத்துமாரியம்மன் ஆகிய ஸ்வாமிகளுடன் வயலூர் கோவில் உற்சவர் முத்துக்குமார ஸ்வாமி சந்திக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பின், ஐந்து ஸ்வாமிகளும் சோமரசம்பேட்டை முக்கிய வீதிகளில் வலம் வந்து தைப்பூச மண்டபத்துக்கு, மதியம், 12 மணிக்கு வருவர். ஆஸ்தான மண்டபத்தில், இரவு, 7 மணி வரை காட்சி தருவர். பக்தர்கள் வசதிக்காக சிறப்பு பஸ்கள் இன்று இயக்கப்படுகின்றன. அதேபோல, திருச்சி மாவட்டத்தில் உள்ள முக்கிய முருகன் கோவில்களில் இன்று தைப்பூசம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !