திருப்போரூர் கந்தசுவாமி கோவில் கருவறைக்குள் புகுந்த பெண்ணால் பரபரப்பு!
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மூலவரை பெண் பக்தர் ஒருவர் இரு தினங்களுக்கு முன் தொட்டு வணங்கியதால், கோவில் நிர்வாகம் சிறப்பு தரிசனத்தில் கட்டுப்பாட்டை விதித்துள்ளது. திருப்போரூரில் பிரபலமான கந்தசுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவர் சுயம்பு மூர்த்தி என்பதால் ஆண்டுக்கு இருமுறை மட்டுமே புனுகுசட்டம் சார்த்தப்படுகிறது. பெரும்பாலான நாட்களில் சுவாமி வெள்ளி கவசத்தில் அருள்பாலிப்பார். கடந்த 13ம் தேதி காலை சிறப்பு தரிசனத்தில் வழிபட வந்த பெண் பக்தர் ஒருவர் பக்தி பரவசத்தில் கருவறைக்குள் திடீரென புகுந்து மூலவரை தொட்டு வணங்கியதாக தெரிகிறது. இதையடுத்து கோவில் நிர்வாகத்தினர் அப்பெண்ணை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். தான் தெரியாமல் செய்துவிட்டதாகவும், மன்னிக்கும்படி கூறியதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார். சிறப்பு தரிசனத்தை 10 அடி தூரத்தில் இருந்து தரிசிக்கும் வாய்ப்பினை கோவில் நிர்வாகம் உடனடியாக ரத்து செய்தது. தற்போது 25 அடி தூரத்தில் சுவாமியை சிறப்பு தரிசனம் செய்ய கட்டுப்பாடு விதித்துள்ளது. இக்கட்டுப்பாட்டை நீக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இதுகுறித்து பக்தர் ஒருவர் கூறுகையில், இதுசம்பவம் எதிர்பாராதவிதமாக நிகழ்ந்த சம்பவமாக இருக்கலாம். இதற்காக கட்டுப்பாடு விதித்ததை ரத்து செய்யவேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் இருக்க, பாதுகாப்பை அதிகப்படுத்தினாலே போதுமானது என்றார்.