நாகர்கோவில் நாகராஜா கோயில் தேரோட்டம்
நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜாகோயில் தை திருவிழா தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நாகர் வழிபாட்டுக்கு பிரசித்த பெற்ற கோயில் நாகர்கோவில் நாகராஜாகோயில். இங்கு நாகர் மூலவராக உள்ளார். இங்குள்ள நாகப்புற்றில் இருந்து எடுக்கப்படும் மண் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. இங்கு நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று தை திருவிழா. கடந்த 9-ம் தேதி கொடியேற்றத்துடன் இந்த விழா தொடங்கியது. விழாவில் தினமும் காலையிலும், மாலையிலும் சுவாமி எழுந்தருளல் நடைபெற்றது. ஒன்பதாம் நாள் விழாவில் தேரோட்டம் நடைபெற்றது. இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஞானசேகர், நாகர்கோவில் நகராட்சி தலைவி மீனாதேவ் ஆகியோர் தேர் வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். நான்கு ரத வீதிகளிலும் தேர் வலம் வந்தது. இரவில் சப்தாவர்ணம் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று 18-ம் தேதி பத்தாம் நாள் விழாவில் ஆராட்டு நடைபெறுகிறது.