உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அகத்திய மாமுனிவர் ஞானம் – முப்பது (பகுதி-4)

அகத்திய மாமுனிவர் ஞானம் – முப்பது (பகுதி-4)

ஞானம் - 03: சித்த வித்யா சாதனையில் முன்னேற்றக் குறிகள் எவை?

பூசையென்ன மானிலமே பூசையாகும்
புருவமையத்தொனிகண்டா லதுவேபோதும்
மாசையென்ன அற்றவிடங் கடந்தஞானம்
அம்பரத்தை செய்யதுவே யாசையாகும்
ஓசையென்ன வாசிவைத்து மூலத்தூணிவுயர்ந்து
நின்றசிலம்பொலியே ஆசையாச்சு
பாசையென்ன பலவகையு உற்றுப்பார்த்தால்
பகட்டாத சொருபத்தால் பணிய நன்றே (03)

பொருளுரை:
பூசையென்ன மானிலமே பூசையாகும்: பூசை என்பது இந்த பூவுகில் உள்ள அனைத்தையும் பூசிப்பதே
புருவமையத்தொனிகண்டா லதுவேபோதும்: புருவமையத்தில் உள்ள ஆக்ஞா சக்கரத்தினை விழிப்பித்து அதில் ஒலியினைகண்டால் அதுவே சாதனையின் பெரிய படி, அதுவே போதும்,
மாசையென்ன அற்றவிடங் கடந்தஞானம்: களங்கமனைத்தையும் கடந்த ஞானம் (பெறுவதற்கு)
அம்பரத்தை செய்யதுவே யாசையாகும்: ஆசையெனில் எல்லா ஆதாரங்களையும் கடந்த வெளியில் தியானம் செய்,
ஓசையென்ன வாசிவைத்து: மூச்சுடன் ஓசையாகிய மந்திரத்தினை வைத்து
மூலத்தூணிவுயர்ந்து : மூலாதாரத்திலிருந்து உன் விழிப்புணர்வினை உயர்த்தி வரும்போது,
நின்றசிலம்பொலியே ஆசையாச்சு: சிலம்பொலிபோல் கேட்கும் அனாகததொனியே ஆசையாகும்
பாசையென்ன பலவகையு உற்றுப்பார்த்தால்: (இந்த நிலையில்) பாசத்தால் கட்டுப்பட்டிடாமல், பலவகையில் விசாரம் செய்து, உற்று நோக்கி,
பகட்டாத சொருபத்தால் பணிய நன்றே: உனது உண்மையான சொருபத்தால் பணிந்தால் நன்மையுடன் சாதனை சித்தியாகும்.

நேர்ப்பொருள்:
மாணவனே, குருவின் பாதத்தை பூசி என்று முதல் பாடலில் கூறியதை வைத்துக்கொண்டு அது மட்டும்தான் பூசை என்று எண்ணி மயங்கி விடாதே, பூசை என்பது இந்த பூமியில் நீ செய்யும் அனைத்து செயல்களுமே பூசையாகும். சாதனையில் நீ ஒரு திருப்தியான ஒரு நிலை அடைந்து விட்டாய் என்பதன் முதற் படி எதுவெனின் புருவமையத்தில் உள்ள ஆக்ஞா சக்கரத்தினை விழிப்பித்து அதில் ஒலியினைகண்டால் அதுவே சாதனையின் குறிப்பிடத்தக்க ஒரு படி, ஆனாலும் இதற்கு மேல் களங்கமற்ற ஞானத்தினை பெறுவதற்கு சகஸ்ராரத்திற்கு மேலுள்ள பெரும் ஆகாய வெளியினை தியானிக்க வேண்டும். இந்தப்படியினை அடைவதற்கு முதலாவதாக செய்ய வேண்டியது மூலாதரத்திலிருந்து வாசியாகிய மூச்சுடன், குருவிடமிருந்து பெற்ற மந்திரத்தினை உன் விழிப்புணர்வுடன் கலந்து நீ முன்னேறிவரும் போது சிலம்பொலி கேட்டல் போன்ற பல அனுபவங்களைப் பெறுவாய். ஆனாலும் அவற்றிலெல்லாம் ஆசைப்பட்டு பாசமுறாமல் உன் மனவைராக்கியத்தால் நாம் சரியான பாதையில் செல்கின்றோமா என உற்றுப்பார்த்து பகட்டில்லாத உன் உண்மை சொருபமான ஞானத்தால் பணிந்தால் சாதனையில் சித்தி பெறுவாய்!

சித்த வித்யா விளக்கவுரை: இந்தப் பாடலில் உள்ள ஞானம் என்னவென்பதைப் பார்ப்போம்; முதலாவதாக

1. முதற்பாடலில் (ஞானம் - 02 இல்) குருவின் பாதகமலங்களை பூசை செய் எனக்கூறியதை வைத்துக்கொண்டு அதுதான் பூசை என எண்ணிவிடாதே என்கிறார். குருவின் பாத கமலங்களை பூசிக்கும் போது நீ எந்த உயர்ந்த மன நிலையை அடைகிறாயோ அதனை இந்த உலகத்தில் உள்ள அனைத்து விடயங்களிலும் காணப்பழகிக்கொள்ள வேண்டும் என உறுதியாக கூறுகிறார். இன்று பலர் குரு வழிபாடு, பாத பூஜை என பகட்டுக்காக செய்வதனால் எந்த பயனுமில்லை என்பதனை இந்த பாடல் மூலம் தெளிவு படுத்துகிறார். இன்றுள்ள சாமியார்கள், பீடாதிபதிகள், குருமாருக்கு பாதபூஜை முதன்மையான விடயம், இதனை செய்யும் எவரும் ஆன்மீக முன்னேற்றம் பெறுவதில்லை இது ஏன் என்பதற்கான விளக்கத்தினை இந்தப் பாடலில் குருநாதர் கூறுகின்றார். அத்துடன்  பூஜை என்ற பெயரில் செய்யப்படும் அர்த்தமற்ற சடங்குகளில் எந்த பயனுமில்லை என்பதனையும் விளக்குகிறார். ஆக பூசை செய்யும் போது ஏற்படும் தெய்வீக மன நிலை உலகில் அனைத்து விடயங்களை செய்யும் போதும் ஏற்ப்படவேண்டும் என்பதனை வலியுறுத்துகின்றார்.

2. அடுத்து சாதனையில் மாணவன் கடக்கும் படியினைக்கூறுகிறார், முதலாவது திருப்தியான படி புருவமையத்தில் உள்ள ஆக்ஞா சக்கரத்தினை விழிப்பித்து அதில் ஒலியினைகாணல், ஆனால் அதுவும் ஞானத்தினை பெறுவதற்கான கடைசிப்படியல்ல, நீ குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடைந்துவிட்டாய் என்பதற்கான அறிகுறி, எனினும் இதற்கு மேல் களங்கமற்ற ஞானத்தினை பெறுவதற்கு சகஸ்ராரத்திற்கு மேலுள்ள பெரும் ஆகாய வெளியினை தியானிக்க வேண்டும்.

3. மேலுள்ள நிலையினை அடைவதற்கான முதலாவதாக செய்ய வேண்டியது மூலாதரத்திலிருந்து வாசியாகிய மூச்சுடன், குருவிடமிருந்து பெற்ற மந்திரத்தினை உன் விழிப்புணர்வுடன் கலந்து நீ முன்னேறிவரும் போது சிலம்பொலி கேட்டல் போன்ற பல அனுபவங்களைப் பெறுவாய். ஆனாலும் அவற்றிலெல்லாம் ஆசைப்பட்டு பாசமுறாமல் உன் மனவைராக்கியத்தால் நாம் சரியான பாதையில் செல்கின்றோமா என உற்றுப்பார்த்து பகட்டில்லாத உன் உண்மை சொருபமான ஞானத்தால் பணிந்தால் சாதனையில் சித்தி பெறுவாய்!

ஆக இந்தப்பாடலில் ஒரு சாதகன் எப்படி சாதனையின் ஆரம்ப படியினை தொடங்க வேண்டும், அதில் ஏற்படும் முன்னேற்றக்குறிகள் என்ன? அடுத்தகட்டத்தில் என்னென்ன அனுபவம் வரும், அதனைக்கடந்து எப்படி ஞானத்தினை அடைவது என்பதற்கான படி முறையினை சொல்கிறார்.

சாதனை:  1. சித்தவித்யா சாதகர் தான் சாதனையில் அடையும் உயர்ந்த மன நிலையை தான் செய்யும் அனைத்து விடயங்களிலும் அனுபவிக்கும் பக்குவம் பெறுதல் வேண்டும்.

2. குரு சொல்லித்தந்த பயிற்சிகளை முறைப்படி செய்து, சாதனையின் இடையில் வரும் சிறிய அனுபவங்களில் மயங்கி விடாமல் களங்கமற்ற ஞானத்தினை பெற தனது வைராக்கியத்தினை உபயோகிக்க வேண்டும்.

நன்றி: சுமனன் – சித்த வித்யா விஞ்ஞானம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !