காஞ்சி நரசிம்ம பெருமாள்கோவிலில் கண்ணாடி அறை திறப்பு
காஞ்சிபுரம்: சிங்கபெருமாள்கோவில் பகுதியில் உள்ள, நரசிம்ம பெருமாள் கோவிலில் புதிய கண்ணாடி அறையில் உற்சவ பெருமாள் எழுந்தருளினார். காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சிங்கபெருமாள்கோவில் பகுதி அமைந்துள்ளது. இங்கு, பிரசித்திபெற்ற பாடலாத்ரி நரசிம்மபெருமாள் கோவில் அமைந்துள்ளது. இங்கு, உற்சவர் பெருமாளுக்காக அடையாறு பகுதியை சேர்ந்த ரவி அய்யங்கார் என்ற நன்கொடையாளர் உதவியுடன், அறநிலையதுறை அதிகாரிகள் 8 லட்சம் செலவில் கோவலில் உள்ள யாகசாலை அருகே புதிய கண்ணாடி அறை அமைத்தனர். இதில், நேற்று காலை 7:30 மணிக்கு, வாஸ்து ஹோமம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, உற்சவ மூர்த்தி பிரகலாத வரதர், ஸ்ரீதேவி, பூதேவியுடன் கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மேலும், வைகாசி மாத பிரம்மோற்சவத்தின் 9ம் நாட்களும் உற்சவர் கண்ணாடி அறையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிப்பார் என, கோவில் செயல் அலுவலர் வீருபொம்மூ தெரிவித்தார்.