உத்தமபாளையத்தில் மழை வேண்டி விவசாயிகள் கூட்டுப் பிரார்த்தனை
உத்தமபாளையம்: மழை வேண்டி கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள், உத்தமபாளையம் பென்னிகுவிக் சிலை முன் சர்வமத கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். கம்பம் பள்ளத்தாக்கில் 14 ஆயிரத்து 470 ஏக்கரில் நெல் விவசாயம் நடக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகவே மழை பொய்த்து, விவசாயத்திற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது. தவிர, போதுமான மழை இல்லாததால், பெரியாறு அணையில் நீர்மட்டமும் கைகொடுப்பதில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு இரண்டாம் போகத்திற்கு பெரியாறு நீரையே விவசாயிகள் நம்பியிருந்தனர். இந்த ஆண்டும் மழை இல்லாமல் பெரியாற்றில் நீர்மட்டம் வெகுவாக குறைந்து வருகிறது. தவிர மழையும் தொடர்ந்து ஏமாற்றி வருவதால், இரண்டாம் போகம் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் கம்பம் பள்ளத்தாக்கில் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். இந்நிலையில், மழை வேண்டி கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் உத்தமபாளையம் பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் பென்னிகுவிக் சிலை முன்பு, விவசாயிகள் சங்கத் தலைவர் தர்வேஷ்முகையதீன் தலைமையில் மும்மத கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இஸ்லாம் மதத்தின் சார்பில் மழைக்காக இறைவனிடம் மவ்லீது வேண்டுதல் தொழுகை நடத்தப்பட்டது. பெரியபள்ளிவாசல் இமாம் மதார் மைதீன், ஷாபிஈ பள்ளிவாசல் இமாம்கள் முகம்மது மீரான், ஷாஜகான், துணை இமாம்கள் அசன், இஸ்மாயில் ஆகியோர் தொழுகை நடத்தினர். கிறிஸ்தவ மதம் சார்பில் ராயப்பன்பட்டி பங்குத்தந்தை ஜோசப் அந்தோணி, அனுமந்தன்பட்டி பங்குத்தந்தை அந்தோணிசாமி ஆகியோர் சிறப்பு திருப்பலி நடத்தினர். இந்து சமயத்தின் சார்பில் ஜெயப்பிரகாஷ் சுவாமிகள் பிரார்த்தனை நடத்தினார். நிகழ்ச்சியில், முன்னாள் எம்.எல்.ஏ., பொன்னுபிள்ளை, விவசாயிகள் சங்க செயலாளர் ஷகுபர் அலி, நிர்வாகிகள் கம்பம் நாராயணன், ராமகிருஷ்ணன், கூடலூர் கலைமன்னன், உத்தமபாளையம் அபுதாஹிர், சையதுலெவை, சின்னமனூர் ராமசுப்பிரமணியன், ராஜா, கோகிலாபுரம் முத்துக்குமார், கருங்கட்டான்குளம் இளங்கோவன், சீலையம்பட்டி ஆர்ம்ஸ்ட்ராங், வயல்பட்டி குபேந்திரன், மார்க்கயன்கோட்டை வெற்றிவேல், உதவி செயற்பொறியாளர்கள் தமிழ்ச்செல்வம், சவுந்தர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பொங்கல் வைத்து வழங்கப்பட்டது.