திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் கொடியேற்றம்: பிப். 9ல் தெப்பத் திருவிழா!
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான கொடியேற்றம் நேற்று நடந்தது. பிப். 9ல் தெப்பத் திருவிழா நடக்கிறது. கோயிலில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை சர்வ அலங்காரத்தில், கொடிக்கம்பம் முன்பு எழுந்தருளினர். சிவாச்சார்யார்களால் நேற்று காலை 9.05 மணிக்கு கொடியேற்றப்பட்டு, தர்ப்பை புல், மா இலை வைத்து பட்டு துணியால் சுற்றி மாலை அணிவிக்கப்பட்டது. கொடிக்கம்பத்தின் அடிப்பாகத்தில் பல்வகை திரவிய அபிஷேகங்கள் நடந்தன. தெப்பத்திருவிழா: திருவிழா நடக்கும் பிப். 9வரை தினம் காலையில் சிம்மாசனம், தங்கச் சப்பரம், சப்பரம், விடையாத்தி ச ப்பரம், மாலையில் தங்க மயில், வெள்ளி பூதம், அன்னம், சேஷம், ரிஷபம், ரத்தின சிம்மாசம், பச்சைக்குதிரை வாகனங்களில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பர். திருவிழா முக்கிய நிகழ்ச்சியாக, பிப். 8ல் தை கார்த்திகையும், அன்று காலை தெப்பம் முட்டுத் தள்ளும் நிகழ்ச்சி முடிந்து, 16கால் மண்டபம் முன்பு உள்ள சிறிய வைரத் தேரில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருளி, ரத வீதிகளில் தேரோட்டம் நடைபெறும். பிப். 9 காலையில் ஜி.எஸ்.டி., ரோட்டிலுள்ள தெப்பக்குள தண்ணீரில் அமைக்கப்பட்டிருக்கும் மிதவை தெப்பத்தில் சுவாமி எழுந்தருளி தெப்பத் திருவிழா நடக்கும். இரவு சன்னதி தெருவில் எழுந்தருளியுள்ள சொக்கநாதர் கோயில் முன்பு, சுப்பிரமணிய சுவாமி, தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி சூரசம்ஹாரம் லீலை நடைபெறும்.