திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் தேரோட்டம்!
திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவில், தேரோட்டம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நடைபெற்று வரும், தை பிரம்மோற்சவத்தின், 7வது நாள் நிகழ்ச்சியாக, நேற்று தேரோட்டம் நடைபெற்றது.நேற்று காலை, 5:45 மணிக்கு, ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராக உற்சவர் வீரராகவர் கோவிலிலிருந்து தேரில் எழுந்தருளினார். அதன்பின், தேர் புறப்பாடு காலை, 7:00 மணிக்கு துவங்கியது.அகோபில மடத்தின், 43வது ஜீயர் ஸ்ரீமத் அழகியசிங்கர், வருவாய்த் துறை அமைச்சர் ரமணா, மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் வடம் பிடித்து தேரோட்டத்தை துவக்கி வைத்தனர்.இதில், திரளான மக்கள் கலந்து கொண்டு, ராகவா, கோவிந்தா என்று கோஷத்துடன் தேரை இழுத்தனர். நான்கு வீதிகளில் வலம் வந்த தேர், காலை, 11:30 மணிக்கு, தேரடி நிலைக்கு வந்து சேர்ந்தது.பின், மாலை, 5:30 மணிக்கு தேரிலிருந்து உற்சவர் மண்டபத்தில் எழுந்தருளி, இரவு, 10:30 மணிக்கு கோவிலுக்குள் சென்றார். இதில், சுற்று வட்டாரத்தை சேர்ந்த மக்கள், பெருமளவில் கலந்து கொண்டு, வீரராகவ பெருமாளை தரிசித்தனர்.