பட்டத்தரசி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்!
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே பட்டத்தரசி அம்மன், மதுரை வீரன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள ஜோதிபுரத்தில் விநாயகர், துர்க்கை, முருகன், சப்தகன்னியர், பொம்மியம்மா உடனமர் மதுரை வீரனுக்கு கோபுரத்துடன் கூடிய கோவில்கள் கட்டப்பட்டுள்ளன. கும்பாபிஷேக விழாவையொட்டி குட்டைத் தோட்டத்திலுள்ள ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் இருந்து 108 தீர்த்தக்கலசங்கள் எடுத்து வரப்பட்டன. இதை தொடர்ந்து திருவிளக்கு வழிபாடும், முளைப்பாரி வழிபாடும் நடந்தது. விழாவையொட்டி விமான கலசங்கள் நிறுவுதல், மூல மூர்த்திகளை ஆதார பீடத்தில் வைத்து எண்வகை மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. இரண்டாவது கால வேள்வியின் போது காப்பு அணிவித்தல், அருள்நிலையேற்றல் ஆகியன நடந்தன. தொடர்ந்து புனிதநீர் அடங்கிய திருக்குடங்கள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. நிகழ்ச்சியில், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், வராஹி மணிகண்ட சுவாமிகள், சிவானந்தா தவக்குடில் ராஜூ அடிகளார் உள்ளிட்டோர் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். விழாவையொட்டி அன்னதானம் நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.