முருகன் கோவிலில் தை கிருத்திகை ஒரு லட்சம் பக்தர்கள் தரிசனம்
திருத்தணி: முருகன் கோவிலில், நேற்று நடந்த தை கிருத்திகை விழாவில், ஒரு லட்சம் பக்தர்கள் கலந்து கொண்டு, மூலவரை வழிபட்டனர்.திருத்தணி முருகன் கோவிலில், மாசி பிரம்மோற்சவ விழா நேற்று முன்தினம் துவங்கியது. இதில், தை கிருத்திகையை முன்னிட்டு, நேற்று காலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு பால், விபூதி, பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உட்பட, பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன.இதை தொடர்ந்து தங்க வேல், தங்க கீரிடம் உட்பட, வைர ஆபரணங்களால் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன. மேலும், காலை, 9:30 மணிக்கு, காவடி மண்டபத்தில், உற்சவர் முருகப் பெருமானுக்கு, சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்தன.தை கிருத்திகை மற்றும் மாசி பிரம்மோற்சவம் என்பதால், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் மலைக் கோவிலுக்கு வந்து, நான்கு மணி நேரம் காத்திருந்து, மூலவரை வழிபட்டனர்.