உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மூங்கிலணை காமாட்சியம்மன் மாசி மகா சிவராத்திரி விழா

மூங்கிலணை காமாட்சியம்மன் மாசி மகா சிவராத்திரி விழா

தேவதானப்பட்டி: தேவதானப்பட்டி மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில், மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்காக நடப்பட்ட முகூர்த்தக்கால் முறிந்ததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். பின்னர் மீண்டும் புதிய முகூர்த்தக்கால் நடப்பட்டது. தேனி மாவட்டம், மூங்கிலணை காமாட்சி அம்மன் கோயில் தேவதானப்பட்டியில் இருந்து 3 கி.மீ., தொலைவில் மஞ்சலாற்றங்கரையில் அமைந்துள்ளது. இக்கோயிலில் மூலஸ்தானம் எனப்படும் குச்சிவீட்டின் கதவு திறக்கப்படுவது இல்லை. அடைக்கப்பட்ட கதவிற்கு மூன்று கால பூஜை நடக்கிறது. பக்தர்கள் வழங்கும் நெய்யினால் ஆண்டு முழுவதும் இரவு, பகலாக அணையாத நெய்விளக்கு எரிகிறது. இங்கு உறுமி, சங்கு, சேகண்டிகள் முழங்க நடைபெறும் சாயரட்சதை பூஜையில் சயன உத்தரவு கேட்பது சிறப்பு.காமாட்சி அம்மன் தனது பக்தையும், ஆதிஜமீன்தாரினியும், பரம்பரை அறங்காவலர்களின் மூதாதையுமான ஸ்ரீ காமக்காள் தனது புதல்வனின் பிரிவால் வருந்தியதற்கிணங்க, பக்தையின் நினைவு தினமான தை மாதம் ரதசப்தமி திதி கூடிய சுபதினத்தன்று, பரம்பரை அறங்காவலர்களால் ஒவ்வொரு ஆண்டிலும் சிரார்த்தம் செய்யப்பட்டு வருகிறது. சிரார்த்தம் முடிந்தவுடன், திருவிழாவிற்கான முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இவ்விழாவில் தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் இருந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்வது வழக்கம். இந்த ஆண்டு மாசி மகா சிவராத்திரி திருவிழாவிற்காக, நேற்று முன்தினம் காலை காமக்காளுக்கு சிரார்த்தம் செய்யப்பட்டு முகூர்த்தக்கால் நடும்பணி துவங்கியது. இதற்காக 60 அடி உயரமுள்ள மூங்கில் மரம் வெட்டி எடுத்து வரப்பட்டு சிவப்பு, வெள்ளை பெயின்ட் அடித்து தயாராக இருந்து. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் மூங்கில் மரம் கிழக்கு, மேற்காக வைக்கப்பட்டு ஏற்றப்படும். ஆனால் இதற்கு மாறாக, தெற்கு வடக்காக வைக்கப்பட்டிருந்தது. வழக்கமான பூஜைகள் முடிந்து, காலை 9.30 மணிக்கு மேல் மரத்தை நடுவதற்கு பக்தர்கள் தூக்கிய போது மரம் முறிந்தது. இதனால் பக்தர்கள் வேதனை அடைந்தனர். அதன் பிறகு புதிய மூங்கில் மரம் வெட்டி எடுத்து வரப்பட்டது. மீண்டும் 11 மணிக்கு மேல் நடப்பட்டது. திருவிழா பிப்ரவரி 27ல் துவங்கி மார்ச் 3ல் முடிகிறது. பொதுமக்கள் புகார்: ஆதி காலத்தில் கோயில் வளாகப்பகுதியில் குடியிருப்புகள் இல்லை. தற்போது குடியிருப்புகள் தோன்றியுள்ளன. மேலும் கோயில் உள்வளாக பகுதியில் மது குடித்து விட்டு பாட்டில்களை உள்ளே போட்டுள்ளனர். பக்தர்கள் மதுப் பாட்டில்களை சேகரித்து இந்து அறநிலையத்துறைக்கு புகார் அனுப்பினர். பழமையான ஐதீகம் மாற்றப்பட்டு, அத்துமீறல்கள் நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !