உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர்: ஐகோர்ட் உத்தரவு!

கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில் தண்ணீர்: ஐகோர்ட் உத்தரவு!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக்குளம் போல், கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் தேக்க, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை கூடலழகர் பெருமாள் கோயிலுக்குச் சொந்தமாக, டவுன்ஹால் ரோடு பகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இங்கு கழிவு நீர் தேங்கி, சுகாதாரக்கேடு ஏற்படுகிறது என, ஐகோர்ட் கிளை பதிவாளர் (நீதித்துறை) 2011 ல், நீதிபதிகளிடம் (பெஞ்ச்) புகார் செய்தார். இதை தானாக முன்வந்து, நீதிபதிகள் விசாரணைக்கு ஏற்றனர். நீதிபதிகள் ஆர்.சுதாகர், எஸ்.வைத்தியநாதன் கொண்ட பெஞ்ச் முன், மனு, நேற்று விசாரணைக்கு வந்தது. தெப்பக்குளத்தை ஆய்வு செய்த, வக்கீல் கமிஷனர்கள் என்.ராமநாதன், டி.அஷ்வின் ராஜசிம்மன், தாக்கல் செய்த அறிக்கை: கடைகளிலிருந்து கழிவுநீர் கசிவதை தடுக்க, கற்களால் மூடியுள்ளனர். தெப்பக்குளத்தில் கழிவுநீர் கலப்பதை நிரந்தரமாக தடுக்க, கழிவுநீர் கசிவு ஏற்படாதவாறு, முழுமையாக சரி செய்ய வேண்டும். மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, கழிவுகளை அகற்றி பராமரிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.

நீதிபதிகள் உத்தரவு: தொழில்நுட்பம் மூலம், மீனாட்சி அம்மன் கோயில் பொற்றாமரைக் குளத்தில் நிரந்தரமாக தண்ணீர் தேக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதுபோல், கூடலழகர் பெருமாள் கோயில் தெப்பக்குளத்தில், நிரந்தரமாக தண்ணீர் தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கோயில் நிர்வாக அலுவலர், பிப்.,19 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !