உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் மாசி மகம் சிறப்பு உற்சவம்!

காளஹஸ்தி சொர்ணமுகி ஆற்றில் மாசி மகம் சிறப்பு உற்சவம்!

காளஹஸ்தி: ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவில் அருகில் உள்ள, சொர்ணமுகி ஆற்றில், மாசி மகத்தை முன்னிட்டு, சிறப்பு உற்சவம், நேற்று, விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர தேவஸ்தானம் தலைமையில், மகா மகம் சிறப்பு உற்சவம் நடைபெற்றது. பிற ஆறுகளில், பன்னிரெண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும், மகாமகம் உற்சவம், சொர்ணமுகி ஆற்றில் மட்டும்,ஆண்டுக்கு ஒரு முறை, மாசி மாதத்தில் வரும் பவுர்ணமி அன்று, மாசி மகம் என்ற, சிறப்பு உற்சவம் நடைபெறும். ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சமேத ஞானபிரசூனாம்பிகை உற்சவ மூர்த்திகள் உட்பட, பஞ்ச மூர்த்திகளும், கோவிலிலிருந்து, சிறப்பு அலங்காரத்துடன் சொர்ணமுகி ஆற்றுக்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு, அங்கு சிறப்பு பூஜைகள் செய்த பின், திரிசூல ஸ்னானம் நடந்தது. ஆற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தால், முக்தி கிடைக்கும் என்பது, பக்தர்களின் நம்பிக்கை. அதனால், பக்தர்கள் புனித நீராடவும், திரிசூல ஸ்னானம் (தீர்த்தவாரி) நடத்தவும், சிறப்பு பூஜைகள் செய்வதற்கும், பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும், தேவஸ்தானம் ஏற்பாடு செய்திருந்தது. இந்த சிறப்பு உற்சவத்தில், கோவில் அதிகாரிகள் உட்பட, பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !