வேண்டிய வரம் தரும் வைகுண்ட வாசன்!
சென்னை-காஞ்சிபுரம் வழியில் பாலூர் ரயில் நிலையத்தில் இறங்கி பாலாற்றைக் கடந்தால் அரும்புலியூர் என்ற கிராமத்தை அடையலாம். இங்கு தான் ஸ்ரீதேவி பூதேவியுடன் நான்கு திருக்கரங்களோடு வைகுந்தவாசன் என்ற திருநாமத்துடன் நின்ற நிலையில் புன்னகையுடன் காட்சியளிக்கிறார் விஷ்ணுபகவான். பெரும் வரப்பிரசாதியான இவர் கருவறைக்கு வலது புறத்தில் தனி சன்னதி கொண்டு நான்கு திருக்கரங்களுடன் அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள் ஆனந்த வல்லித் தாயார். உற்சவர் தாயார் தாமரை பீடத்தில் அமர்ந்த நிலையில் காட்சி தருவது சிறப்பு. இக்காட்சியைத்தான் மகாகவி சுப்ரமண்ய பாரதியார்
பாற்கடலிடைப் பிறந்தாள் - அது
பயந்த நல்லமுதத்தின் பான்மை கொண்டாள்
ஏற்றுமோர் தாமரைப்பூ - அதில்
இணை மலர் திருவடி இசைந்திருப்பாள்
என்று வியந்து பாடுகிறார்.
வரம் வேண்டி வந்தாரை வாழ வைத்து அவர்கள் வாழ்வில் ஆனந்தம் பொங்கச் செய்து கொண்டிருக்கிறார்கள் இத்தலத்தில் சேவை சாதிக்கும் வைகுந்த வாசனும் ஆனந்த வல்லித் தாயாரும்.