உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மோகினி அவதாரக் கோயில்

மோகினி அவதாரக் கோயில்

கேரள மாநிலம் குருவாயூரிலிருந்து திருச்சூர் செல்லும் சாலையில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது அரியன்னூர் தலம். இங்கு ஹரிகன்யகாதேவி பின்னிருகரங்களில் சங்கு சக்கரமேந்தி, முன் இடக்கரத்தை இடுப்பில் வைத்து வலக்கரத்தில் அமிர்த உருண்டை ஏந்திக் காட்சி தருகிறாள். மகாவிஷ்ணு எடுத்த மோகினி அவதாரத் திருக்கோலத்தில் இந்த தேவி எழுந்தருளியிருப்பதாகக் கூறுகின்றனர். இவ்வூர் முதலில் ஹரிகன்யகாபுரம் என அழைக்கப்பட்டு தற்போது அரியன்னூர், அரிகன்னியூர் எனவும் வழங்கப்படுகிறது. இங்குள்ள தேவியின் சிலை அஞ்சனசிலா எனப்படும் ஒருவித சிறப்புக் கருங்கல்லில் வடிக்கப்பட்டது. சுமார் 5 அடி உயரம் கொண்ட இந்த தேவி சிலைக்கு தற்போது பஞ்சலோகக் கவசம் சாற்றப்பட்டுள்ளது. சர்வாலங்காரங்களுடன் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறாள் பகவதி தேவி.

ஒரு காலத்தில் குருவாயூர் கோயிலைவிட இந்த ஆலயம் செல்வச் செழிப்புடன் இருந்தது. அப்போது நடத்தப்பட்ட சந்திரோத்சவம் என்ற உற்சவம் தற்போது நின்று போய்விட்டது. பரசுராமர் ஸ்தாபித்த 108 பகவதி ஆலயங்களுள் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. 14-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகக் கருதப்படும் இந்த ஆலயத்தின் நுழைவுவாயில் மிகுந்த வேலைப்பாடுகளுடன் உள்ளது. கிழக்கு நோக்கிய இவ்வாலயத்தில் கணபதி, பத்ரகாளி, ஐயப்பன் சன்னதிகளும் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !