ராமேஸ்வரம் கோயிலில் நாளை சிவராத்திரி கொடியேற்றம்!
ராமேஸ்வரம்: மாசி மகா சிவராத்திரி விழாவையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், நாளை (பிப்.,20) காலை 10:00 மணிக்கு கொடியேற்றம் நடக்கிறது. தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் விழாவில் சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்கம், வெள்ளி வாகனத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறும். திருவிழாவின் 3 ம் நாள் விழாவான, பிப்., 22 ல், அதிகாலை 3:00 மணிக்கு கோயில் நடை திறந்து, 3:30 க்கு, ஸ்படிகலிங்க பூஜை, கால பூஜை நடைபெறுகிறது. காலை 6:30 க்கு கோயிலில் இருந்து சுவாமி, வெள்ளி பூதவாகனம், பர்வத வர்த்தினி அம்மன் வெள்ளி கிளி வாகனத்தில், பஞ்சமூர்த்திகளுடன் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு புறப்பாடானவுடன், கோயில் நடை சாத்தப்படும். மாலை 6:00 மணிக்கு, கெந்தமாதன பர்வதம் மண்டகப்படியில் சுவாமி, அம்மனுக்கு மகா தீபாராதனை முடிந்தவுடன், அங்கிருந்து புறப்பாடாகி, கோயிலில் எழுந்தருளியவுடன், நடை திறக்கப்பட்டு, அர்த்த ஜாம பூஜைகள் நடைபெறும். பின், மீண்டும் கோயில் நடை சாத்தப்படும் முக்கிய விழாவான பிப்., 27 ல், மகா சிவராத்திரியன்று, மின் அலங்காரத்துடன் கூடிய வெள்ளி ரதத்தில் எழுந்தருளும் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு கங்கை நீர் அபிஷேகம் நடக்கும். பிப்., 28 ல் மாசி தேரோட்டம் நடக்கிறது. சுவாமி, அம்மன் தேரில் எழுந்தருளி, வீதி உலா செல்கின்றனர். மார்ச் 1 ல், மாசி அமாவாசையை முன்னிட்டு, சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, அக்னி தீர்த்த கரையில் எழுந்தருளுகின்றனர். அங்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது.