உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி துவங்கியது!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நாட்டியாஞ்சலி துவங்கியது!

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், 33ம் ஆண்டு நாட்டியாஞ்சலி விழா நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை சார்பில், மகா சிவராத்திரியை  முன்னிட்டு, 33ம் ஆண்டு நாட்டியாஞ்சலி நேற்று மாலை  துவங்கியது. சிதம்பரம் சிவக்குமார் தீட்சிதர் தலைமை தாங்கினார். முதல் நிகழ்ச்சியாக பரத நாட்டியக் கலைஞர் இந்து மாலினி, அனுஷியா ஹரிகரனின் பரத நாட்டியம் நடந்தது. இதைத் தொடர்ந்து அண்ணாமலை பல்கலைக் கழக கவின்கலை துறை மாணவர்கள், அமெரிக்கா பத்மாராணி ராசையா கண்ட்டு, டாக்டர் பத்மா சுப்ரமணியன், இவரது அண்ணன் பாலசுப்ரமணியன் பேத்தி மகதி கண்ணன் ஆகியோரின் பரத நாட்டியம் நடந்தது. இரவு 8.10 மணிக்கு, சென்னை ஐகோர்ட் நீதிபதி ராமசுப்ரமணியன் தலைமை தாங்கி விழாவை துவக்கி வைத்தார். நாட்டியாஞ்சலி அறக்கட்டளைத் தலைவர் வழக்கறிஞர் நடராஜன் வரவேற்றார். விழாவில், சிதம்பரம் நாட்டியாஞ்சலி அறக்கட்டளை பொருளாளர் தொழிலதிபர் ராமநாதன், துணைத் தலைவர்கள் சாமிநாதன், பாலதண்டாயுதம், இணைச் செயலர்கள் நடராஜன், கணபதி, டாக்டர் முத்துக்குமரன், சபாநாயகம், டி.எஸ்.பி., ராஜாராம், சபாநாயகர் கோவில் கமிட்டி செயலர் காசிராஜ தீட்சிதர், ருத்ர கணேச தீட்சிதர் உட்பட பலர் பங்கேற்றனர். வரும் 3ம் தேதி வரை 5 நாட்கள் நடக்கும் நாட்டியாஞ்சலியில், பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !