சிவராத்திரி விழாவையொட்டி ராமேஸ்வரத்தில் திரண்ட பக்தர்கள்!
ராமேஸ்வரம்: சிவராத்திரியையொட்டி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் கோயிலில் பிப்., 20ம் தேதி, சிவராத்திரி விழா கொடி ஏற்றத்துடன் துவங்கி 12 நாட்கள் நடைபெறுகிறது. நேற்று 8ம் நாள் விழாவில், மாசி சிவராத்திரியையொட்டி சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் சன்னதியில் காலை முதல் சிறப்பு பூஜை நடந்தது. கோயிலில் இருந்து நடராஜர் சுவாமி, சிவகாமி அம்மன் கேடய வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தனர். ராமேஸ்வரம் கோயிலை குலதெய்வமாக வணங்கும் டில்லி, குஜராத், மஹராஷ்டிரா, உத்திர பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், ராமேஸ்வரம் வந்தனர். அனைவரும் அக்னி தீர்த்த கரையில் பூஜை செய்து நீராடி, கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடினர். பின், சுவாமி சன்னதியில் பக்தர்கள் கொண்டு வந்த, புனித கங்கை நீரில் அபிஷேகம் செய்து, தரிசனம் செய்தனர்.