உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் மகாசிவராத்திரி விழா

உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் மகாசிவராத்திரி விழா

உடுமலை, மறையூர், மடத்துக்குளம் உள்ளிட்ட சுற்றுப்பகுதி கோவில்களில், மகா சிவராத்திரி விழா, கொண்டாடப்பட்டது; ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். உடுமலை திருமூர்த்திமலையில், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூன்று சுவாமிகளும் ஒருங்கே அமைந்த அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், மகாசிவராத்திரி விழா கடந்த 26ம் தேதி துவங்கியது. அன்றிரவு 8.00 மணிக்கு, பூலாங்கிணர் கிராமத்தில், திருச்சப்பரத்துக்கு பூஜை செய்யப்பட்டு, நேற்றுமுன்தினம் தேதி மாலை 4.00 மணிக்கு, பூலாங்கிணரில் இருந்து, திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலுக்கு திருச்சப்பரம் கொண்டு வரப்பட்டது. திருச்சப்பரம் கோவிலை அடைந்ததும், சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மகா சிவராத்திரி முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவு 8.00 மணிக்கு கோவிலில், முதற்கால பூஜை, அபிேஷகம், தீபாராதனை நடந்தன. இரவு 10.00 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், நள்ளிரவு 2.00 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், நேற்று அதிகாலை 4.00 மணிக்கு நான்காம் கால பூஜையும், 5.00 மணிக்கு சிறப்பு அலங்காரம், சோடச உபசார தீபாராதனையும் நடந்தன. இக்கோவிலுக்கு, பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில், சிறப்பு பஸ்கள் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரை, இயக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் மகா சிவராத்திரி விழாவில் பங்கேற்று, சுவாமியை வழிபட்டனர்.

மடத்துக்குளம், கடத்துாரில், சோழ மன்னர்களால் கட்டப்பட்ட அர்ச்சுனேஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. ஆண்டுமுழுவதும், சூரியக்கதிர்கள் இறைவனின் திருமேனியில், படும் சிறப்பு பெற்ற இத்தலத்தில், மகா சிவராத்திரி முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலை 6.00 மணி முதல் நேற்று காலை 6.00 மணி வரை, நான்கு யாமங்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன. மாலை 6.00 முதல் இரவு 9.00 மணி வரையான முதலாவது யாமத்தில், பஞ்சகவ்ய அபிேஷகமமும், இரவு 9.00 முதல் நள்ளிரவு 12.00 மணி வரையான, இரண்டாவது யாமத்தில் பஞ்சாமிர்த அபிேஷகமும், நள்ளிரவு 12.00 முதல் 3.00 மணி வரையான, மூன்றாவது யாமத்தில், 1.00 மணிக்கு சிவலிங்கம் தோன்றிய காலம், கொம்புத்தேன் அபிேஷகமும், நேற்று அதிகாலை 3.00 முதல் காலை 6.00 மணி வரையான, நான்காம் யாகத்தில், கரும்புச்சாறு அபிேஷகமும் நடந்தன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !