உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மீனாட்சி கோயிலை சுற்றி விதிமீறல் கட்டடங்கள்!

மீனாட்சி கோயிலை சுற்றி விதிமீறல் கட்டடங்கள்!

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களைச் சுற்றி, எத்தனை கட்டடங்கள் 9 மீட்டர் உயரத்திற்கு மேல் உள்ளன? என, "லேசர் முறையில் அளவீடு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய மாநகராட்சிக்கு, ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. மதுரை வக்கீல் முத்துக்குமார் தாக்கல் செய்த பொதுநல மனு: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்களைச் சுற்றி, அங்கீகரிக்கப் படாத உயர கட்டடங்கள் கட்டிமறைத்துள்ளனர். தமிழக அரசு 1997 ல், "கோபுரங்களை சுற்றி 9 மீட்டர் உயரத்திற்கு மேல் கட்டடங்கள் கட்டக்கூடாது என, உத்தரவிட்டது. மதுரையில் கட்டட உயரம் மற்றும் ஒழுங்குமுறை சட்டத்தை, அரசு 1994 ல் அமல்படுத்தியது. இதன்படி, சித்திரை வீதிகளில் 9 மீ., வெளி வீதிகளில் 12 மீ., நகரின் பிற பகுதிகளில் 15 மீ., உயரத்திற்கு மேல் கட்டடங்கள் கட்டக்கூடாது. விதி மீறிய கட்டடங்கள் மீது, நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

ஐகோர்ட் கிளை உத்தரவுப்படி நியமிக்கப்பட்ட வக்கீல் கமிஷனர்கள் எஸ்.ரமேஷ், வி.சித்தரஞ்சன் தாஸ் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள், கோயிலைச் சுற்றியுள்ள கட்டடங்களை ஆய்வு செய்தனர். பின், "அம்மன் சன்னதி, சித்திரை வீதிகள், கிழக்கு ஆவணி மூல வீதி மற்றும் சந்துகளில், விதியை மீறி, 547 கட்டடங்கள் உள்ளதை அடையாளம் கண்டுள்ளோம் என, அறிக்கை தாக்கல் செய்தனர். நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், வி.எம்.வேலுமணி பெஞ்ச் முன், மனு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வக்கீல் ஆர்.செந்தில்குமார் ஆஜரானார்.

நீதிபதிகள் உத்தரவு: வக்கீல் கமிஷனர்களின் பணி கடினம். கட்டடங்களை ஆய்வு செய்ய, அவர்களுக்கு மேலும் 6 வாரங்கள் அவகாசம் வழங்குகிறோம். கோயிலைச் சுற்றி 1 கி.மீ.,சுற்றளவில் எத்தனை கட்டடங்கள் 9 மீ.,உயரத்திற்கு மேல் உள்ளன? என "லேசர் முறையில், மாநகராட்சி அளவீடு செய்ய வேண்டும். மூன்று மாடி கட்டடங்கள் எத்தனை; அதில் 1997 க்கு முன் கட்டப்பட்டவை; 1997 க்கு பின் கட்டப்பட்டவை; வரிவசூலிக்க மதிப்பீடு செய்யப்பட்டவை எவை? என, மாநகராட்சி ஆவணங்கள்படி கண்டறிய வேண்டும். விதிமீறல் நடந்துள்ளதா? என மாநகராட்சி கமிஷனர், அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !