முத்தாலம்மன் கோயில் பங்குனி திருவிழா கொடியேற்றம்!
பரமக்குடி: பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமேஸ்வரி அம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. பங்குனி திருவிழாவை முன்னிட்டு நேற்று பரமக்குடி ஸ்ரீ முத்தால பரமமேஸ்வரி அம்மன் கோயிலில் கொடியேற்றம் நடந்தது. பின், கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் முடிந்து, தீபாராதனை நடந்தது. பக்தர்கள் ஏராளமானோர் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி, தினமும் அம்மன் வெள்ளி சிங்க, அன்ன, ரிஷப, யானை, கிளி, காமதேனு, குதிரை உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் காலை, மாலை எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். முக்கிய நிகழ்ச்சியாக, மார்ச் 17ல், காலை அக்னிச்சட்டி ஊர்வலம், மாலை 7.45 மணிக்கு அம்மன் சர்வ அலங்காரத்தில் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளில் வீதி உலா வருகிறார். அன்று, இரவு 2 மணிக்கு மேல் அம்மன் கள்ளர் திருக்கோலத்துடன் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். மார்ச் 18ல், கொடியிறக்கம் நடக்கிறது. மறுநாள் 19ல், காலையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்கும், பால்குட விழாவும், இரவு பூப்பல்லக்கில் அம்மன் வீதியுலாவுடன் விழா நிறைவடைகிறது. ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை டிரஸ்டிகள், ஆயிரவைசிய சபை நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.