பண்ணாரி மாரியம்மன் சத்தியில் வீதியுலா!
சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் நகர்பகுதியில் பண்ணாரி அம்மன் சப்பரத்தில் வீதி உலா வந்தபோது பக்தர்கள் தண்ணீர் ஊற்றி வரவேற்றனர்.சத்தியமங்கலம் அடுத்துள்ளது பண்ணாரி மாரியம்மன் கோவில். இந்த கோவிலின் முக்கிய பண்டிகையான குண்டம் விழா கடந்த, 3ம் தேதி திங்கட்கிழமை பூச்சாட்டுடன் துவங்கியது. இதையடுத்து பண்ணாரி அம்மன் சப்பரத்தில் வெள்ளி கவசத்துடன் சிக்கரசம்பாளையம், வெள்ளியம்பாளையம் புதூர், தொட்டம்பாளையம், பகுத்தம்பாளையம், தத்தப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் வீதி உலா சென்றது.இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் இரவு, சத்தியமங்கலம் நகர் பகுதிக்கு வந்தது. வடக்குபேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோவிலில், பண்ணாரி அம்மன் சப்பரம் தங்கியது. நேற்று சத்தியமங்கலம் வடக்குப்பேட்டை, கடைவீதி, அக்ரஹாரம், மணிகூண்டு உள்ளிட்ட பகுதியில், பண்ணாரி மாரியம்மன் வீதி, வீதியாக சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.சத்தியமங்கலத்துக்கு சப்பரத்தில் வந்த பண்ணாரி மாரியம்மனை, இப்பகுதி பக்தர்கள் வானவேடிக்கையுடன் வரவேற்றனர்.நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், அலுவலகம் செல்லும் மக்களும், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளும் சிரமமின்றி பண்ணாரி மாரியம்மனை வணங்கினர். பெண்கள் தங்கள் வீதிக்கு வந்த மாரியம்மன் சப்பரத்துக்கு தண்ணீர் ஊற்றியும், தேங்காய், பழம் வைத்து பூஜை செய்தும் பயபக்தியுடன் வணங்கினர்.பெரும்பாலான பெண்கள் மஞ்சள் மற்றும் சிகப்பு நிறத்தில் புடவை அணிந்து, கையில் வேப்பிலையுடன் அம்மனை வணங்கினர். நேற்று இரவு, சத்தியமங்கலம் மணிகூண்டு அருகே உள்ள வேணுகோபால் சுவாமி கோவிலில், பண்ணாரி மாரியம்மன் தங்கினார்.இன்று, பண்ணாரி மாரியம்மன் கோணமூலை, காந்தி நகர், ரங்கசமுத்திரம், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி பகுதியில் வீதி உலா சென்று, ரங்கசமுத்திரம் விரிவாக்க வீதியில் உள்ள, மேற்குபுற முத்துமாரியம்மன் கோவிலில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.இரவில், கோட்டுவீராம்பாளையம் சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் தங்குகிறார். நாளை, செவ்வாய்கிழமை வீதி உலாவின் இறுதி நாளாகும். நாளை காலை, சத்தியமங்கலத்தில் இருந்து புறப்பட்டு, பட்டவர்த்தி அய்யம்பாளையம், புதுவடவள்ளி, புதுக்குய்யனூர், பசுவாபாளையம், புதுபீர்கடவு, பட்டரமங்கலம், ராஜநகர் வழியாக இரவு பண்ணாரி கோவிலை அடைகிறது.பின்னர் கோவிலில் கம்பம் சாட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, அறநிலைத்துறை துணை இயக்குனர் நடராஜன் தலைமையில், அலுவலர்கள் செய்கின்றனர்.