ஸ்ரீவில்லிபுத்தூர் மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா!
ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியமாரியம்மன் கோயிலில், (மார்ச்30) பூக்குழி திருவிழா நடக்கிறது. கடந்த 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் ,தினமும் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் ,சிம்மம், காமதேனு, ரிஷபம், தண்டியல், சேஷ, குதிரை வாகனத்தில் வீதியுலா வருதல் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ,25ம் தேதி நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர். முக்கிய திருவிழாவான பூக்குழி இறங்குதல், நாளை நடக்கிறது. இதையொட்டி, அதிகாலை 5.20 மணிக்கு தீ வளர்த்தலும், தொடர்ந்து தீ அள்ளுதலும், அக்னி குண்டத்தில் சேர்த்தலும் நடக்கிறது. காலை 9 மணிக்கு, அம்மன் பந்தலுக்கு எழுந்தருளலும், மதியம் 1.45 மணிக்கு பூக்குழி இறங்குதல் நடக்கிறது. பூக்குழி இறங்கும் பக்தர்கள் ,ஸ்ரீவில்லிபுத்தூர் நான்கு ரதவீதிகளும் சுற்றி வந்து, கோயிலை வந்தடைந்து ,நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்குவர். மதுரை, தேனி, விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களிலிருந்தும், ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வர். ஏற்பாடுகளை ,தக்கார் ராமராஜா, செயல் அலுவலர் லதா செய்கின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி.,முரளீதரன் தலைமையில் போலீசார் செய்கின்றனர். சிறப்பு பஸ்களும் இயக்கப்படுகிறது.