காலம் வருகிறது.. ஆணவக்கணக்கை முடிக்க!
உலகிலுள்ள எல்லாவற்றையும் விட காலமே மிகப்பெரிய சக்தி. அதற்கு கட்டுப்படாதவர்கள் யாருமில்லை.சிறுவர்கள் பந்தை வைத்து விளையாடுவது போல, காலம் என்னும் சக்தி சூரியனையும், சந்திரனையும் பந்தாக்கி நம்மிடம் விளையாடுகிறது. தன்னை யாரும் வெல்லமுடியாது என்ற ஆணவத்துடன், மனிதன் அலைகிறான். ஆனால், குறித்தநேரத்தில், காலம் மனிதனின் கணக்கை முடித்து விடுகிறது.நடுவுநிலை கொண்ட மனிதன் வாழ்வில் தவறு செய்யவிரும்புவதில்லை. அதனால், அவன் அமைதியை இழப்பதுஇல்லை.பொருள் தேடுவதில் மட்டுமே வாழ்நாளைப் பயன்படுத்துவோர், கீழான குணம் படைத்தவர்கள்.ருசி மிகுந்த மாம்பழத்தை எல்லோரும் விரும்புவது போல, அறிவாளிகளின் நட்பைஅனைவரும் விரும்பி ஏற்பர். தவளையோடு சேர்ந்து சேற்றில் கூட குதிக்கலாம். ஆனால், அறிவில்லாதவர்களுடன் நட்பு பாராட்டுவது கூடாது.
ஏற்றத்தாழ்வு நிறைந்தது இந்த உலகம். ஆனால், அதில் ஈடுபட்டிருந்தாலும் மனதில் சோர்வுக்கோ, சஞ்சலத்திற்கோ இடம் அளிக்காதவர்கள் போற்றுதலுக்குரியவர்கள். மனதிருப்தியை மனிதன் இழப்பது கூடாது. மிகுந்த செல்வச் செழிப்பும், உலக இன்பங்களும் கூட அதற்கு ஈடுஇணை கிடையாது.தேவையற்ற ஆசைகளை மனதில் நுழைய விடாமல் இருப்பதே சந்தோஷத்திற்கான வழிமுறை.மலர்ச்சியும் சந்தோஷமும் மனதில் எப்போதும் நிறைந்திருக்கவேண்டும். இந்த குணம்கொண்டவன் முகம் பிரகாசத்துடன் இருக்கும். நம்மிடம் இல்லாததை நினைத்து ஏங்கக்கூடாது. நேர்மையான வழியில் கிடைத்ததைக் கொண்டு வாழ்வதே பெருந்தன்மை.நிலவுக்கு கூட களங்கம் உண்டு. ஆனால், நேர்மையான நடத்தை உள்ளவன் களங்கமற்ற நிலவைப் போல மகிழ்ச்சியுடன் வாழ்வான்.செல்வத்தால் அடையும் இன்பம் கொஞ்சம் தான். ஆனால், மனதிருப்தி உள்ளவன் அடையும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை.ஆசை அதிகமுள்ளவனுக்கு அறிவு சுமையாகவும், அமைதி இல்லாதவனுக்கு மனம் சுமையாகவும் தோன்றும். அமைதியின்றித் தவிப்பவன் மனம், தீமைகள் விளையாடும் மைதானமாக மாறி விடும்.
சந்திரனைப் பிடித்த கிரகணம் போல, மனிதனின் மனதை அகங்காரம் என்னும் கிரகணம் பிடித்து ஆட்டி வைக்கிறது. உலகிலுள்ள எல்லா மனிதர்களின் மனதிலும் அகங்கார எண்ணம் ஒரு சிங்கத்தைப் போல உலாவி வருகிறது.காற்றில் ஆடும் இலை போல, மனம் கட்டுப்பாடு இல்லாமல் விருப்பு, வெறுப்பு எண்ணத்தால் அலைக்கழிக்கப்படுகிறது.பேராசை, கோபம் இந்த இரண்டும் மனிதனை துன்பத்திற்கு ஆளாக்கும்காரணிகள்.இளமையில் துன்பத்தை அனுபவித்து, வாழ்வைக் கடந்து வந்த பெரியவர்கள் வணங்கத் தக்கவர்கள்.இரவில் காணும் கனவு போல இளமைக்காலம் நம்மிடம் தோன்றி மறைந்து விடும். இளமையில் கீழான விஷயங்களை நாடாமல்,தீமையைப் புறக்கணித்தவர்கள் சிறப்பான வாழ்வு பெறுவர்.