15 ஆண்டுகளுக்கு பின் பொங்கல்: வயல்வெளியில் பெண்கள் வழிபாடு!
வத்திராயிருப்பு : வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தில், 15 ஆண்டுகளுக்கு பின், வயல்வெளியில் நடந்த பொங்கல் விழாவில்,ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.இங்கு, வயல்களுக்கு மத்தியில், இரட்டை ஆலமரத்தடி கருப்பசாமி கோயில் உள்ளது. பழமை வாய்ந்த இக்கோயிலில், நெல் அறுவடை முடிந்து, பங்குனிமாதம் பொங்கல் விழா நடைபெறும். சேதாரம், பாதிப்புகள் இன்றி நல்லபடியாக மகசூலை கொடுத்த இறைவனுக்கு நன்றி தெரிவித்தும்,அடுத்த மகசூலுக்கு நல்ல மழை வேண்டியும், விவசாயிகளும், பொதுமக்களும், அக்கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு செய்வார்கள். கடந்த 15 ஆண்டுகளாக, இத்திருவிழா நின்றுபோனது.தற்போது கடும் வறட்சி நிலவுவதால், விவசாயம் பெரும் இழப்புகளை சந்தித்து வருகிறது.இந்நிலையில், மழைவேண்டி மீண்டும் கருப்பசாமிக்கு, பொங்கல் வழிபாடு நடத்த, கிராம மக்கள் முடிவு செய்தனர்.அதன்படி, கடந்த இரு தினங்களுக்கு முன், கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது.இதை தொடர்ந்து, நேற்று பொங்கல் விழா நடந்தது. நையாண்டி மேளத்துடன் பெண்களை வீடுவீடாக சென்று அழைத்து வந்தனர். 200 க்கு மேற்பட்ட பொங்கல் பானைகளை சுமந்தபடி,பெண்கள் கோயில் மைதானத்திற்கு வந்து, பொங்கல் வைத்தனர். பின்னர் அனைத்து பொங்கல் பானைகளும், சுவாமிக்கு முன் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகளும், படையல் வழிபாடும் நடத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான பெண்கள், பொதுமக்கள் வழிபட்டனர்.ஏற்பாடுகளை,கோயில் நிர்வாகிகள் கோவிந்தராஜ், முத்தாலப்பன், மணிகண்டன், தீபக்குமார், செல்வராஜ், தர்மராஜ், ஊர் நாட்டாமைகள் ஸ்ரீரங்ககுமார், கருப்பையா, ராமர் செய்தனர்.