விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் தேரோட்டம்!
விருதுநகர்: விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் பங்குனி விழாவை யொட்டி, மாரியம்மன், வெயிலுகந்தம்மன் பவனி வரும் தேரோட்டம் நேற்று மாலை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, தரிசனம் செய்தனர். மாரியம்மன் கோயில் பொங்கல் விழா,கடந்த மாதம் 30 ம் தேதி,கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் எட்டாவது நாள் பொங்கல்,9 ம் நாள் அக்னி சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்துதல் நடந்தது. 10ம் நாளான நேற்று தேரோட்டம் நடந்தது. விநாயகர் தேர் முன்பாகவும், அதை தொடர்ந்து , மாரியம்மன், வெயிலுகந்தம்மன் எழுந்தருளிய தேர் வந்தது.தேரோட்டத்தை கோயில் நிர்வாகிகள் தொடங்கி வைத்தனர். தேரானது, தேசபந்து மைதானத்தில் தொடங்கி, மெயின் பஜார் வழியாக, தெற்கு ரத வீதியில் வந்து நின்றது. அங்கு பக்தர்கள், இரு அம்மன்களையும் தரிசித்தனர். பக்தர்களுக்கு, நீர், மோர் வழங்கப்பட்டது. விருதுநகர் மட்டுமன்றி, சுற்று பகுதி கிராமத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, அம்மன் அருள் பெற்றனர். தேரானது, இன்று காலை நிலைக்கு வந்து சேரும்.