உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த .. இருக்கும் கோயிலுக்கு இல்லாத பூசாரி!

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த .. இருக்கும் கோயிலுக்கு இல்லாத பூசாரி!

உசிலம்பட்டி: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆனையூர் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு பூசாரி இல்லாத நிலையில் ஒரு கால பூஜை நடப்பதாக கணக்கு காட்டி வருகின்றனர்.  ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஐராவதீஸ்வரர் ஆலயம் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கி.பி., 958 ம் ஆண்டிலிருந்து பாண்டியர்கள், சோழர்கள், நாயக்க மன்னர்கள் இந்த கோயிலில் வழிபாடு நடத்த உதவியதற்கான கல்வெட்டுக்கள் உள்ளன. பழமை வாய்ந்த இந்த கோயிலுக்கு சொந்தமாக 150 ஏக்கருக்கும் மேலாக மானிய நிலங்களும் உள்ளன. அறநிலையத் துறை கட்டுப்பாட்டுக்கு கோயில்கள் வந்தபின் இந்த கோயில் சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயில் அறநிலையத்துறை அலுவலர் கட்டுப்பாட்டிற்கு வந்தது. இங்கிருந்த அர்ச்சகர் குடும்பத்தினர்கள் போதிய வருமானம் இல்லாமல் வெளியூர்களுக்கு குடி பெயர்ந்தனர். தொடர் பராமரிப்பு இல்லாததால் நிலங்களில் இருந்து குத்தகை தொகை வசூலிக்கப்படவில்லை. பூட்டப்பட்ட நிலையில் உள்ள இந்த கோயில் ஒருகால பூஜை திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்காக தினசரி பூஜைக்கு 25 ரூபாய் வீதம் மாதம் 625 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கோயில் முன்பாக அறிவிப்பு போர்டும் வைத்துள்ளனர். சுரேஷ் என்பவர் பூசாரியாக தினசரி காலை 10.00 மணிக்கு ஒருகால பூஜை நடப்பதாக அறிவிப்பு பலகையில் எழுதியுள்ளனர்.

பூசாரியே இல்லை: முன்னாள் டிரஸ்டியாக இருந்த கட்டக்கருப்பன்பட்டியைச் சேர்ந்த பம்பையத்தேவரின் மனைவி சீனியம்மாள் 72, இந்த கோயிலை பராமரித்து வருகிறார். எப்போதும் பூட்டப்பட்டு கிடக்கும் கோயிலின் சாவியும் இவரிடம் தான் உள்ளது. வழிபாட்டுக்கு வருபவர்கள் இவர் மூலமாக கோயிலை திறந்து வழிபாடு நடத்திச் செல்கின்றனர்.

சீனியம்மாள் கூறியதாவது
: கணவர் இறந்த பிறகு கோயிலை நான்தான் பராமரித்து வருகிறேன். கோயிலுக்கு ஏராளமான நிலங்கள் இருந்தும் அவை ஆக்கிரமிப்பில் உள்ளன. அறநிலையத்துறை அதிகாரிகள் யாரும் இந்த கோயில் குறித்து கண்டுகொள்வதில்லை. சில நாட்களுக்கு முன்பாக இங்கு சுரேஷ் என்பவர் பூஜை செய்வதாக இந்த போர்டை வைத்துச் சென்றுள்ளனர். பூஜை நடத்துவதற்கென்று யாரும் இங்கு வருவதில்லை. பக்தர்கள் வந்தால் நான்தான் சூடம் காட்டுவேன். இல்லையென்றால் அவர்களாகவே வழிபாடு நடத்திச் செல்வார்கள் என்றார்.

அறநிலையத்துறை அலுவலர்கள் கூறியதாவது : கோயில் நிலங்கள் குறித்து உசிலம்பட்டி கோர்ட்டில் வழக்கு நடக்கிறது. ஒருகால பூஜை திட்டத்தின் கீழ் இந்த கோயில் உள்ளது. கணக்கு விடுபடக் கூடாது என்பதற்காக சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோயிலில் பணிபுரியும் சுரேஷ் என்பவர் தற்காலிக பூஜை நடத்துவதாக போட்டுள்ளோம். அர்ச்சகர் விரைவில் நியமிப்போம் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !