பத்மானாபசுவாமி கோவிலின் நிர்வாக குழு தலைவர் பதவி ஏற்பு!
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவில் நிர்வாகத்தை கவனிக்க, நியமிக்கப்பட்ட புது நிர்வாக குழுவின் தலைவராக, நீதிபதி பொறுப்பு ஏற்றுக்கொண்டார். கேரள தலைநகர் திருவனந்தபுரத்தில், பிரசித்தி பெற்ற, பத்மனாபசுவாமி கோவில் என்ற பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவிலில், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகள், பொக்கிஷங்கள் இருப்பது, சமீபத்தில் கண்டறியப்பட்டது.சுப்ரீம் கோர்ட் மேற்பார்வையில், அந்த கோவில் நகைகள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. கோவில் நிர்வாகத்தை கவனிக்க, மாவட்ட நீதிபதி தலைமையில், ஐந்து உறுப்பினர் குழுவை, கடந்த வியாழனன்று, சுப்ரீம் கோர்ட் நியமித்தது. மாவட்ட நீதிபதி, இந்து மதத்தை சாராதவர் என்பதால், கூடுதல் மாவட்ட நீதிபதியிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிபதி, கே.பி. இந்திரா, நிர்வாக குழுவின் தலைவர் பொறுப்பை, நேற்று முன்தினம் ஏற்றார். குழுவில், கோவிலின் தந்திரி என்றழைக்கப்படும் பூசாரியும், கோவிலின் தலைமை காவலரும், மாநில அரசின் சார்பில் இருவர் என, ஐந்து பேர் இடம் பெற்றுள்ளனர். கோவிலின் செயல் அதிகாரியாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி, கே.என்.சதீஷ், சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்டு உள்ளார்.