அமாவாசையை முன்னிட்டு பண்ணாரியில் பக்தர்கள் கூட்டம்!
சத்தியமங்கலம்: அமாவாசையை முன்னிட்டு, பண்ணாரி மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. தமிழகத்தில் உள்ள முக்கிய அம்மன் ஸ்தலங்களில், சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி மாரியம்மன் ஸ்தலம் ஒன்றாகும். நேற்று, அமாவாசை என்பதால், காலை, ஆறு மணி பூஜைக்கே, பக்தர்கள் அதிகமாக காணப்பட்டனர். மதியம் உச்சி கால பூஜையின்போது, கோவிலை சுற்றிலும், வரிசையில் நீண்ட நேரம் காத்திருந்து, பக்தர்கள் பண்ணாரி மாரியம்மனை தரிசனம் செய்தனர். நேற்று முன்தினம் இரவு, ஈரோடு, கோபி, திருப்பூர், சத்தியமங்கலம் பகுதிகளில் இருந்து, பக்தர்கள் திரளாக நடந்து வந்து பண்ணாரி அம்மனை வழிபட்டனர். நேற்று, பக்தர்களுக்கு பண்ணாரி மாரியம்மன் தங்க கவசத்தில் அருள்பாலித்தார். அம்மனுக்கு பணத்தால் கட்டிய மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. கோவிலுக்கு முன் உள்ள குண்டத்தில், பக்தர்கள் உப்பு கொட்டி வணங்கினர். கோவில் வளாகத்தில், பல்வேறு பகுதிகளில் அன்னதானம் வழங்கி, பக்தர்கள் தங்கள் நேர்த்தி கடனை நிறைவு செய்தனர். இதேபோல், அம்மாவாசையை முன்னிட்டு, சத்தியமங்கலத்தில் உள்ள பவானீஸ்வரர் கோவில் மற்றும் வேணுகோபால்சுவாமி கோவிலும், சிவியார்பாளையத்தில் உள்ள மலைக்கோவில் என்று அழைக்கப்படும் தவளகிரி தண்டாயுதபாணி சுவாமி கோவிலிலும், பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. பண்ணாரி அடுத்து திம்பம் முதல் கொண்டை ஊசி வளைவில் இருந்து, கிழக்கே அடர்ந்த வனப்பகுதியில் உள்ள, காட்டு பண்ணாரி என்று அழைக்கப்படும், பேளேரி அம்மன் கோவிலுக்கு, அடர்ந்த வனப்பகுதியில் பக்தர்கள் திரளாக நடந்து சென்றது குறிப்பிடத்தக்கது.