உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோமையார் தேரோட்டம் கோலாகலம்

தோமையார் தேரோட்டம் கோலாகலம்

மணப்பாறை: மணப்பாறை அருகே உள்ள மலையடிப்பட்டியில் பாஸ்கா திருவிழா மற்றும் தோமையார் தேரோட்டம் நடந்தது. மணப்பாறை அருகே மலையடிப்பட்டியில், 129 ஆண்டுகள் பழமைவாய்ந்த புனித தோமையார் மலைத்திருத்தலம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பாஸ்கா திருவிழா மற்றும் தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடப்பது வழக்கம். இந்தாண்டு கடந்த, 21ம் தேதி புத்தாநத்தம் பங்குத்தந்தை ஜேசுராஜ் திருப்பலி நிறைவேற்றி தூய தோமையார் திருக்கொடியை ஏற்றி திருவிழாவை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 24ம் தேதி மற்றும் 25ம் தேதி நடந்த ஆண்டவர் இயேசுவின் பாடுகளின் பாஸ்கா மற்றும் தூம்பா பவனி ஆகிய நிகழ்ச்சிகளை மவுன மடம் பங்குத்தந்தை டோம்னிக், கப்புசின்சபை அந்தோணிராஜ், உலகம்பட்டி பங்குத்தந்தை அந்தோணிசாமி ஆகியோர் துவக்கி வைத்தனர். அன்றிரவு நடந்த ஆண்டவர் இயேசுவின் உயிர்ப்பு ரதப்பவனியை பூலாம்பட்டி பங்குத்தந்தை அந்தோணிரமேஷ் மந்திரித்து துவக்கி வைத்தார். 26ம் தேதி இரவு தூயதோமையார் ரதம் தோமையார் மலையில் இருந்து கீழே கொண்டு வரப்பட்டு மலையடிப்பட்டி நடுவீதியில் உயிர்த்த ஆண்டவர் மற்றும் தூயதோமையர் சந்திப்பு நடந்தது. இதில் மணிகண்டம் கார்மேல்சபை தேவராஜ் பிராத்தனை நடத்தினார். நேற்று முன்தினம் அனந்தராயன்கோட்டை மறைவட்ட அதிபர் ஜோசப்செல்வராஜ், மணப்பாறை உதவி பங்குத்தந்தை ஜஸ்டின்திரவியம், மண்ணின் திருமறைமைந்தர்கள் ஆரோக்கியம், ஸ்டீபன்கஸ்பர், தாமஸ்ஞானதுரை, சகாயராஜா, மரியஇன்னாசி, ஜெரோம் ஆகியோர் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தோமையார் பெரியதேரை மணப்பாறை பங்குத்தந்தை சகாயராஜ் மந்திரித்து துவக்கி வைத்தார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேர் மலையடிப்பட்டி முக்கிய வீதிகளில் வழியாக வீதியுலாவந்து நிலைக்கு நின்றது. விழா ஏற்பாடுகளை மலையடிப்பட்டி பங்குத்தந்தை ஜோசப், பஞ்., தலைவர் தோல்நாகராஜ், ஊர்தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !