திருவொற்றியூர் கோவிலை கட்டியது யார்?
எழும்பூர்: முற்காலத்தில் கட்டப்பட்ட கோவில்களில், அவற்றை கட்டிய மன்னனின் பெயரை கண்டுபிடிப்பதே, அரிதாக இருந்தது. ஆனால், இன்றைய காலத்தில், ஓரடியில் கோவில் கட்டி விட்டு, இரண்டு அடிக்கு கல்வெட்டு நடும் மரபு, வளர்ந்து வருகிறது, என, தொல்லியல் துறை கல்வெட்டு ஆய்வாளர், சிவானந்தம் பேசினார்.
தமிழக தொல்லியல் துறையின் சார்பில், : திருவொற்றியூர் கோவில் - ஒரு வரலாற்று பார்வை என்ற தலைப்பில், சிறப்பு சொற்பொழிவு, எழும்பூரில் உள்ள, தொல்லியல் துறை தலைமை அலுவலகத்தில், நேற்று முன்தினம் நடந்தது.தொல்லியல் துறை கமிஷனர் (பொறுப்பு) வசந்தி, வரவேற்புரை ஆற்றினார். கல்வெட்டு ஆய்வாளர் சிவானந்தம், கருத்தரங்கில் பேசியதாவது: தொண்டை மண்டலத்தின் தனிச்சிறப்பு வாய்ந்த, கட்டட கலையான, :தூங்கானை மாடம் திருவொற்றியூர் கோவிலில் உள்ளது. இதன், இன்னொரு பரிணாமம், மாமல்லபுரம் ஐந்து ரத சிற்பத்தில் உள்ளது. ஏழாம் நூற்றாண்டைச் சேர்ந்த இந்த கோவிலில், கி.பி., 9 முதல் கி.பி., 12ம் நூற்றாண்டுகள், கி.பி.,19ம் நூற்றாண்டு ஆகியவற்றை சேர்ந்த, பல்வேறு கல்வெட்டுகள், காணப்படுகின்றன. கருவறைக்கு அருகில், கி.பி.,8ம் நூற்றாண்டைச் சேர்ந்த, சோழர் கால ஓவியம், கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. கோவில்களில் உள்ள, பெரும்பாலான சிற்பங்கள், சோழர் கால சிற்ப கலையை எடுத்துரைப்பதாக உள்ளன.அங்குள்ள விஷ்ணு சிற்பம், தனி சிறப்பு வாய்ந்தது. மற்ற மன்னர் காலத்தில் அமைக்கப்பட்ட ஆண் சிலைகள், திடம் பொருந்தியவர்களாகவும், அகன்ற தோள்கள், பரந்த மார்பு உடையவர்களாக, காணப்படும். ஆனால், சோழர் கால, விஷ்ணு சிற்பம், பெண் தன்மை கொண்டு, மெலிதான உருவத்தில், வடிவமைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள, லகுலீசர் சிற்பத்தை பார்த்தாலே, தியான நிலை ஏற்படும். பல்வேறு யோக முத்திரைகள் கொண்டதாக, அவரது சிற்பம், வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலுக்கு, பல்வேறு சிறப்புகள் இருந்தாலும், யார் இந்த கோவிலை கட்டியது என்ற நேரடியான தகவல் இல்லை. ஆனால், இன்றைக்கு, ஓரடியில் கோவில் கட்டிவிட்டு, இரண்டு அடியில் கல்வெட்டு நடும் மரபு, வளர்ந்து வருகிறது. இவ்வாறு, அவர் பேசினார்.