காஞ்சிபுத்தில் ராமானுஜர் அவதார உற்சவம்!
காஞ்சிபுரம்: ராமானுஜரின் அவதார உற்சவத்தை முன்னிட்டு, நேற்று, அவரது சன்னிதியில் சிறப்பு பூஜை நடந்தது. காஞ்சிபுரம் செவிலிமேடு பகுதியில், ராமானுஜர் கோவில் உள்ளது. அங்கு, அவரது 997வது அவதார உற்சவத்தை முன்னிட்டு, காலை 6:00 மணிக்கு, பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டனர். காலை, 10:00 மணியிலிருந்து 12 மணி வரை, திருமஞ்சன அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள், நூற்றந்தாதி பாடினர். அதன் பின், அன்னதானம் வழங்கப்பட்டது.
ஆதி சங்கரர் ஜெயந்தி: நேற்று, ஆதிசங்கரர் ஜெயந்தி விழா, சங்கர மடத்தில் கொண்டாடப்பட்டது. இந்த விழா, கடந்த, 30ம் தேதி துவங்கி, நேற்று நிறைவடைந்தது. இந்த விழாவை முன்னிட்டு சங்கர மடம், தர்சன ஹால், தேனம்பாக்கம் சிவஸ்தானம் ஆகிய இடங்களில், ஆதி சங்கரர் திரு உருவ சிலைக்கு அபிஷேகம் நடந்தது. அங்கு, வேதபாராயணம் பாடப்பட்டது. நேற்று மாலை 6:00 மணிக்கு, ஆதி சங்கரர் உருவச்சிலை அலங்கரிக்கப்பட்டு, ராஜ வீதிகளில் ஊர்வலம் நடந்தது.
தங்க பல்லக்கில் ராமானுஜர்: ஸ்ரீபெரும்புதூரில், ஆதிகேசவப் பெருமாள் மற்றும் பாஷ்யகார சுவாமி கோவிலில், கடந்த 25ம் தேதி, ராமானுஜர் அவதார உற்சவம் துவங்கியது. 10ம் நாள் உற்சவமான நேற்று காலை, 9:30 மணிக்கு, ராமானுஜர், அலங்கரிக்கப்பட்ட தங்கப் பல்லக்கில் எழுந்தருளி, திருவீதி உலா வந்தார். ஸ்ரீபெரும்புதூர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு, ராமானுஜரை வழிபட்டனர். ராமானுஜர் வீதி உலா செல்லும் போது, பஜனை கோஷ்டிகள், பக்தி பாடல்கள் பாடி, ஆடி மகிழ்ந்தனர்.