உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மே 10ல் மீனாட்சி திருக்கல்யாணம்: தண்ணீர் பாட்டிலுக்கு மட்டும் அனுமதி!

மே 10ல் மீனாட்சி திருக்கல்யாணம்: தண்ணீர் பாட்டிலுக்கு மட்டும் அனுமதி!

மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில், மே 10ல், திருக்கல்யாணம் நடப்பதையொட்டி, போலீசார் சில முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். நான்கு சித்திரை வீதிகளிலும் எட்டு கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆவணி மூல, மாசி வீதிகளிலும் 15 கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் ஒரு எஸ்.ஐ., தலைமையில் இரு போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். திருக்கல்யாணத்தை காண வரும் பக்தர்கள், மே 10 காலை 8 மணி முதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவர். காலை 9.30 மணிக்குள் திருக்கல்யாண மண்டபத்தில் பக்தர்கள் அமரவேண்டும். இலவச தரிசனம் செய்யும் பக்தர்கள் தெற்கு கோபுரம் வழியாகவும், ரூ.200 டிக்கெட் பெற்ற பக்தர்கள் வடக்கு கோபுரம் வழியாகவும், ரூ.500 டிக்கெட் பெற்றவர்கள் மற்றும் வி.ஐ.பி.,க்கள் மேற்கு கோபுரம் வழியாகவும் செல்ல வேண்டும். சித்திரை வீதிகள், மேற்கு மற்றும் வடக்காடி வீதிகளில், பெரிய திரையில் திருக்கல்யாணத்தை காண கோயில் நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருக்கல்யாணத்திற்கு வரும் பக்தர்கள் தண்ணீர் பாட்டிலை மட்டும் கொண்டு வர வேண்டும். பை, கேமரா, வீடியோ கேமராக்களுக்கு அனுமதி இல்லை. ஆடி, சித்திரை வீதிகளில் பிரசாதம் கொடுக்க அனுமதியில்லை. பிரசாதம் கொடுக்க விரும்புவர்கள், போலீசிடம் அனுமதி பெற்று, குறிப்பிட்ட இடங்களில் மட்டும் வழங்கலாம். மே 10ம் தேதி மட்டும் இலவசமாக காலணி காப்பகங்கள் நேதாஜி ரோடு கல்யாண் ஜூவல்லரி எதிரே, மீனாட்சி தெரு மதுரை ஆதீன மடம் அருகே, மொட்டை கோபுர தெரு, மீனாட்சி பார்க் அருகே, மேற்கு - வடக்கு சித்திரை வீதி சந்திப்பு பகுதியில் மாற்றப்படவுள்ளன. திருக்கல்யாணம் முடிந்து, பழைய திருக்கல்யாண மண்டபத்திற்கு சுவாமி வந்த பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவர். இதற்காக வரும் பக்தர்கள், தெற்கு, கிழக்கு கோபுரங்கள் வழியாக வந்து, தரிசனம் முடிந்து, பிற கோபுரங்கள் வழியாக வெளியேற வேண்டும். சித்திரைத் திருவிழா பாதுகாப்பில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுகின்றனர். குற்றச்சம்பவங்களை தடுக்க 200 சிறப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர். வெடிகுண்டு போலீசார் பத்து பிரிவாக பிரிந்து சோதனை செய்து வருகின்றனர். பொதுமக்கள் தங்கள் குறை, புகார் குறித்து 96263 86100, 97511 70100, 97513 56100, 96264 05100ல் தொடர்பு கொள்ளலாம், என போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !